சமஸ்கிருத, இந்தித் திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் சமஸ்கிருத, இந்தித் திணிப்பை மத்திய அரசு அறவே கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமஸ்கிருத, இந்தித் திணிப்பை மத்திய அரசு அறவே கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்து, தேர்ச்சி (பாஸ்) அடைந்தால் மட்டுமே, 6-ஆம் வகுப்பிலிருந்து 7-ஆம் வகுப்பிற்குச் செல்ல முடியும்” என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. “சமஸ்கிருதத்திற்குப் பதில், தமிழை மொழிப் பாடமாக எடுத்து தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது” என்று வெளிவந்துள்ள இன்னொரு தகவல் பேரதிர்ச்சியளிக்கிறது.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளத்தில் வாழும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியை பின்னுக்குத்தள்ளி - வழக்கொழிந்து போன சமஸ்கிருதத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் தாய்மொழி விரோத நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“தமிழ்நாட்டில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ்மொழியை ஏன் கற்கக் கூடாது” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு - அதாவது சட்டத்தின் ஆட்சிக்கு, மத்திய பா.ஜ.க. அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்கவும் - கட்டாயமாக கற்கவும் உத்தரவிட்டு - சமஸ்கிருத, இந்தித் திணிப்பை தமிழகத்தில் அறவே கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். எல்லா உரிமைகளையும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, தமிழர்களுக்கும் - அன்னைத் தமிழ்மொழிக்கும் செய்யும் துரோகத்தை உணர்ந்து - கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்ச் செம்மொழிக்கு, “அ.தி.மு.க. - பா.ஜ.க. அரசுகள்” கை கோர்த்து உருவாக்கும் பேராபத்தை தமிழகம் ஒருபோதும் மறக்காது; மன்னிக்காது; தமிழகத்தின் எதிர்காலமாம் இன்றைய மாணவ - மாணவியர் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள் என்று எடுத்துரைக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.