தமிழ்நாடு

ஸ்டாலினின் முதல்வராகும் கனவு பலிக்காது: பல்லடத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு

DIN

பல்லடம்: முதல்வர் ஆக வேண்டும் என்று கனவு கானும் ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை பேசினார்.  

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது,  அதிமுகவின் ஆட்சியை பற்றி பொய் பிரசாரம் செய்வதையே ஸ்டாலின், கனிமொழி வழக்கமாக கொண்டுள்ளனர். திமுகவிற்கு தேர்தல் பிரசாரம் செய்ய தமிழகம் முழுவதும் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, தயாநிதி என்று ஒட்டுமொத்த குடும்பமும் புறப்பட்டுவிட்டது. 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாததால் அவர்கள் கோர பசியில் உள்ளனர். அதனால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எதை எதையோ பேசுகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு அவர்கள் கட்சியில் எத்தனையோ முன்னோடித் தலைவர்கள் உள்ளனர். அவர்களை விட்டு விட்டு ஸ்டாலின் குடும்பத்தை நம்பியுள்ளனர். 

கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யாமல் 4 அல்லது 5 திரைப்படங்களில் நடித்த உதயநிதி, கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்கிற போர்வையில் அவர்களது கட்சியில் முன்னேறியுள்ளார். கருணாநிதி மகன் என்கிற வகையில் எந்தக் கஷ்டத்தையும் ஸ்டாலின் அனுபவிக்கவில்லை. கருணாநிதியின் மகன் என்கிற வகையில் திமுக தலைவராகியுள்ளார். அவருக்கு மக்களின் கஷ்டம் தெரியாது. மக்களை மறந்து தங்களது குடும்ப வாரிசுகளுக்காக ஆட்சி செய்வது திமுக. அதனால் தான் அவர்களை மக்கள் மறந்து விட்டனர். நான் சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் பிறந்து படித்து கட்சியில் உறுப்பினராகி பின்னர் கிளை செயலாளராகி படிப்படியாக உயர்ந்து இன்று ஜெயலலிதாவின் செல்வாக்கால் எம்.எல்.ஏ.ஆகி அதன் பின்னர் முதல்வராகியுள்ளேன். 

ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்ற பின்பலம் உள்ளது. எனக்கு மக்கள் சக்தி தான் பின்பலமாக உள்ளது. சாதாரண தொண்டன் முதல்வராக ஆட்சி செய்யும் மாநிலமாக இந்தியாவிலேயே தமிழகம் திகழ்கிறது. இந்தியாவிலேயே வேறு எந்தக் கட்சியிலும் இது போல் நடக்காது. அதிமுகவில் சாதாரண தொண்டனும் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், முதல்வர் வரை ஆகலாம். அதனால் தான் ஏழை எளிய நடுத்தர மக்களின் கஷ்டங்கள், சிரமங்களை உணர்ந்து அதற்கேற்ப திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த முடிகிறது. 

தமிழகத்தில் மக்கள் விரும்பும் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அதனை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. ஸ்டாலின் சட்டசபைக்கு வருவதில்லை. இயற்றப்படும் திட்டங்கள் பற்றி தெரிவதில்லை அதனால் தான் எதுவும் அதிமுக ஆட்சியில் செய்யவில்லை என்று செல்லுமிடமெல்லாம் தினந்தோறும் அதிமுக ஆட்சி பற்றி பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அதனால் தான் நாட்டு மக்களுக்கு அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் பற்றி பத்திரிகை,தொலைக்காட்சி வயிலாக தெரிவித்து வருகிறோம்.

இது தவறாக இருந்தால் தெரிவியுங்கள். அதிமுக ஆட்சியில் நடைபெறாத ஊழல் நடந்து விட்டதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். இந்தியாவிலேயே ஊழல் செய்தமைக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்பதை நாட்டு மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள். ஊழல் பற்றி பொதுமேடையில் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார் ஸ்டாலின் தயாரா? 

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.400 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. இரண்டு கைகளை இழந்த திண்டுக்கலை சேர்ந்தவருக்கு இறந்த ஒருவரின் கை வெட்டி எடுக்கப்பட்டு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டு அவர் இன்று நன்றாக உள்ளார். ரூ.20 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை கருவிகள் 10 அரசு மருத்துவமனைக்களுக்கு வாங்கி தரப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் மின் வெட்டு பிரச்னையால் விசைத்தறி தொழில் பாதிப்படைந்து இருந்தது. அதன் பின்னர் முதல்வரான ஜெயலலிதா தான் கொடுத்த வாக்குறுதியின்படி மின் பிரச்னைக்குத் தீர்வு கண்டு தடையில்லா மின்சாரம் வழங்கியதோடு இன்று தமிழகம் மின் மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளது. அதிமுக ஆட்சியில் எந்த தொழில் முதலீடும் வரவில்லை என்று கனிமொழி பேசிய செய்தி பத்திரிகையில் படித்தேன். கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.3.50 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடு வந்துள்ளது. அதன் மூலம் 304 புதிய தொழில் நிறுவனங்கள் துவக்கப்படவுள்ளது. அதற்கான வேலை துரிதமாக நடைபெற்று வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேர் புதிய வேலைவாய்ப்பு பெறுவர். 

பல்லடத்தில் அரசு கலைக்கல்லூரி துவக்கப்பட்டது போல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் போன்றவை துவக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி படிப்புக்கு பின்னர் தமிழகத்தில் 100க்கு 49 பேர் உயர் கல்வி பயின்று வருகின்றனர். இந்தியாவிலேயே வேறு எங்கும் இந்த அளவிற்கு உயர் கல்வி பயிலுவோர் எண்ணிக்கை உயரவில்லை. கேரளத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6.80 பைசா கட்டணம் உள்ளது. தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கி வருகிறோம். ஆண்டுக்கு ரூ.8 ஆயிரமும், 5 ஆண்டுகளுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 

ஆணைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கிறேன். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வீடு இல்லை என்று இனி சொல்லக்கூடாது. அந்த வகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டித் தரப்படும். விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யப்படும். இந்தியாவில் புனாவிற்கு அடுத்தபடியாக பல்லடத்தில் தான் ரூ.13 கோடியே 50 லட்சம் மதிப்பில் கோழி இன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் ஊர், ஊராக பெட்டி தூக்கிக் கொண்டு போய் பெட்சீட் விரித்து அமர்ந்து மக்கள் மத்தியில் இதில் மனு போடுங்கள் நான் முதல்வராகி பெட்டியை திறந்து 100 நாளில் மனுக்களுக்கு தீர்வு காண்கிறேன் என்கிறார். 

முதல்வர் ஆக வேண்டும் என்று கனவு கானும் ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது. தேர்தல் அறிவிப்பு முதல் வாக்குப்பதிவு எண்ணிக்கை வரை விபரம் மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தை கேட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள். 1100 என்ற உதவி எண்ணுக்கு நீங்கள் உங்க வீட்டிலேயே இருந்தப்படி குடிநீர்,தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் குறைக்கள், தேவைகள் பற்றி பதிவு செய்யலாம். அது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள். இத்திட்டம் 10 நாளில் நான் துவக்கி வைக்கிறேன். அதனால் இனி ஸ்டாலின் மனு பெட்டிக்கு வேலை இல்லை. என்னுடைய ஆட்சியில் குறை சொல்ல குறை இல்லை என்ற நிலை தான் உள்ளது. வரும் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து மகத்தான வெற்றியை பெறச்செய்ய வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து பல்லடம் கொங்குவேளாளர் திருமண மண்டபத்தில் மகளிர் கூட்டத்தில் பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சித்துராஜ், நகர செயலாளர் ஏ.எம்.ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT