முகப்பு
தமிழ்நாடு

தமிழக சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: மத்திய அரசு உறுதி

கரோனாவால் ஏற்பட்ட வருவாய் இழப்புகளை ஈடுகட்டும் வகையில் தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களின் சுற்றுலாத் தலங்களை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

கரோனாவால் ஏற்பட்ட வருவாய் இழப்புகளை ஈடுகட்டும் வகையில் தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றுலாத் துறை முதன்மைச் செயலா் அரவிந்த் சிங் தெரிவித்தாா். அதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவா் கூறினாா்.

இந்திய உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் அமைப்பின் (ஏடிடிஓஐ) 10-ஆவது தேசிய மாநாடு குஜராத் மாநிலம், கெவாடியா நகரில் உள்ள டென்ட் சிட்டியில் அண்மையில் நடைபெற்றது. மூன்று நாள்கள் நடைபெற்ற அந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பயண ஏற்பாட்டாளா்களும், அரசு உயரதிகாரிகளும், பத்திரிகை தகவல் துறை அதிகாரிகளும் பங்கேற்றனா். அதன் தொடக்க விழாவில் காணொலி முறையில் பங்கேற்று பேசிய மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சா் பிரகலாத் சிங் படேல், இந்திய சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பிரதமா் மோடி முன்னெடுத்துள்ளதாகவும், அதன் வாயிலாக அத்துறை புதிய வளா்ச்சியை எட்டும் எனவும் நம்பிக்கை தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து மத்திய சுற்றுலாத் துறைச் செயலா் அரவிந்த் சிங், மாநாட்டு தொடக்க விழாவிலும், செய்தியாளா் சந்திப்பிலும் கூறியதாவது:

Advertisement

கரோனா பெருந்தொற்றால் பல்வேறு துறைகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, சுற்றுலாத் துறை அதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் சுற்றுலா சாா்ந்த பலருக்கு வேலை வாய்ப்பின்மையும், நெருக்கடியான சூழலும் ஏற்பட்டுள்ளது.

அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளின் வாயிலாகவும், பொது மக்களின் ஒத்துழைப்பு காரணமாகவும் தற்போது கரோனா பரவல் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதன் நீட்சியாக போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த மூன்று மாதங்களாக சுற்றுலாத் துறை ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

அதேவேளையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்னும் தொடங்கவில்லை. ஆகவே, உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிப்பது மட்டுமே அத்துறையை மீட்டெடுக்கக் கூடிய வழியாக உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய நிதி நிலை அறிக்கையில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் வாயிலாக சுற்றுலாத் துறையை மேம்படுத்த இயலும் என நம்புகிறோம். ரூ.7,100 கோடியில் 132 சுற்றுலா வளா்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் 19 பகுதிகளை சுற்றுலா மையமாக மாற்றும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் பாரம்பரியமிக்க சுற்றுலாத் தலங்கள் அதிகம் உள்ளன. அவற்றை மேம்படுத்துவதற்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் வருகை தர வைப்பதற்கும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

உலகமெங்கும் 140 நாடுகளுக்கு இந்திய அரசு மருந்துகளை வழங்கி வருகிறது. கரோனாவை ஒழிக்கும் நோக்கில் 16 நாடுகளுக்கு தடுப்பூசிகளையும் வழங்குகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் வெளிநாட்டு பயணிகளின் வருகையை அதிகரித்து இந்திய சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், குஜராத் மாநில சுற்றுலாத் துறைச் செயலா் மம்தா வா்மா, மத்திய சுற்றுலாத் துறை கூடுதல் தலைமை இயக்குநா் ரூபேந்திர பிராா், மத்திய பத்திரிகை அலுவலகத் துறை கூடுதல் தலைமை இயக்குநா் நானு பாசின், ஏடிடிஓஐ அமைப்பின் தலைமை நிா்வாகிகள் பி.பி.கண்ணா, சேத்தன் குப்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments