தமிழ்நாடு

தபால் வாக்காளர் பட்டியல் எப்போது வழங்கப்படும்?: நீதிமன்றம் கேள்வி

DIN

சென்னை: தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் பட்டியல் எப்போது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து திமுக, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளரும், எம்எல்ஏவுமான கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவில், இறுதி வாக்காளர் பட்டியலை பெற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை உள்ளது.

அதன்படி தொகுதி வாரியாக, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளின் விவரப் பட்டியலை வழங்கக் கோரி கடந்த நவம்பர் மாதம் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன்.

அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே தொகுதி வாரியாக 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளின் விவரப் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விடுதலை, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின்படி, வாக்காளர் பட்டியலைப் பெற அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது.

அந்த வகையில் தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும், மாற்றுத் திறனாளி வாக்களர்களின் தனி பட்டியலை வழங்க வேண்டும். அப்போது தான் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு முன் கூட்டியே இந்த வசதி குறித்து விளக்கி, தேர்தல் நடைமுறைகள் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய முடியும் என வாதிட்டார்.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நிரஞ்சன், தேர்தல் அறிவித்த பின்னர் தான், தபால் வாக்குகள் பதிவு செய்ய  விண்ணப்பங்கள்  வழங்கப்படும்.

அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து தேர்தல் அதிகாரிகள் முடிவெடுப்பார்கள். அதன் பிறகு தான் அப்பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தபால் வாக்குகள் பதிவு செய்ய எப்போது விண்ணப்பம் பெறப்படும்? எப்போது அதன் மீது முடிவெடுக்கப்படும்? எப்போது அந்த பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக எழுத்துப்பூர்வமான பதில்மனுவை வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி தாக்கல் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT