பிரதமர் நரேந்திர மோடி நாளை புதுச்சேரி, கோவை வருகை
அரசு விழா மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (பிப்ரவரி 25) கோவை, புதுச்சேரி வருகை தருகிறார்.
அரசு விழா மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (பிப்ரவரி 25) கோவை, புதுச்சேரி வருகை தருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை 7.45 மணிக்கு தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.20 மணிக்கு சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரி ஜிப்மரில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு அரசுக் கட்டடங்களையும் திறந்துவைக்கிறார்.
இதையடுத்து, பாஜக சார்பில் லாசுப்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார்.
மீண்டும் பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை திரும்புகிறார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் புறப்படும் அவர் பிற்பகல் 3.30 மணிக்கு கோவை வருகிறார். இதைத் தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று மின்வாரியம், மத்திய கப்பல் போக்குவரத்து, குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், முடிக்கப்பட்ட பல திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்.
பின்னர் மாலை 5 மணிக்கு கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதில் பாஜக முக்கியத் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்க உள்ளனர். பொதுக் கூட்டம் முடிந்ததும் கோவையில் இருந்து தனி விமானம் மூலம் தில்லி புறப்படுகிறார்.
பிரதமர் வருகையை ஒட்டி கொடிசியா வளாகம் மற்றும் மைதானப் பகுதியில் ஆயுதம் ஏந்திய போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க கூடுதல் டிஜிபி அம்ரேஷ் புஜாரி கோவை வந்துள்ளார். அவருடன் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள், மேடைப் பாதுகாப்பு, பொதுக் கூட்ட பாதுகாப்பு, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பாதுகாப்புப் பணியில் 17 எஸ்.பி.க்கள், 38 கூடுதல் எஸ்.பி.க்கள், 48 டிஎஸ்பிக்கள் உள்பட 3,000 பேர் ஈடுபட உள்ளனர். கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் நோக்கில் கொடிசியா வளாக நுழைவாயில் அருகே தற்காலிகமாக சிறிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தில்லியில் இருந்து சிறப்புப் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் 30 பேர் கோவை வந்துள்ளனர். பிரதமர் பயணிக்கும் குண்டு துளைக்காத 4 கார்களும் விமானத்தில் வரவழைக்கப்பட்டுள்ளன.