விவசாயிகள், சிறு வியாபாரிகளுக்கு முக்கியத்துவம்: பிரதமர்
நாட்டில் விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கோவையில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கோவையில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் உரையாற்றினார். இதன் மூலம் தமிழகத்தில் நரேந்திர மோடி தமது பிரசாரத்தைத் தொடங்கினார்.
பேசுவதற்கு முன்பு வெற்றிவேல் வீரவேல் என்று தமிழில் முழக்கமிட்டார்.
சிறு-குறு தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்:
பின்னர் அவர் பேசியதாவது, ''தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்துவிட்டு உங்களிடம் உரையாற்றுகிறேன்.
தமிழக மக்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உதவும் வகையிலான திட்டங்களைத் தொடக்கி வைத்துள்ளேன். சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
கோவையில் மட்டும் 25 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மத்திய அரசின் திட்டத்தால் பயன்பெற்றுள்ளன. புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் முன்னேற வேண்டும்:
ஜவுளித்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 7 புதிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன். 11 கோடி விவசாயிகள் மத்திய அரசின் திட்டத்தால் பயன் பெற்று வருகின்றனர். சிறு-குறு தொழில் நிறுவனங்களுடன் நான் இருக்கிறேன்.
வளர்ச்சிக்கு எதிரானவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று இந்திய மக்கள் விரும்புகின்றனர். நாட்டு மக்கள் வளர்ச்சியை அளிக்கும் அரசியலை விரும்புகின்றனர் என்பது கடந்த தேர்தலில் தெரிந்தது.
கூட்டுறவு மற்றும் கூட்டாட்சிக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படுகிறது.
தமிழ் மொழியில் மருத்துவம், பொறியியல்:
உள்ளூர் மொழிகளில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் பயில நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழி உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த மொழி. தமிழர் திருவிழாக்கள் உலக அளவில் புகழ் பெற்றவை.
திமுகவினுடையது ஊழல் ஆட்சி:
திமுக தனது தொன்மையை இழந்துவிட்டது. ஊழல் செய்வதற்காக தனது மூளையை திமுக பயன்படுத்துகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்கு தொல்லைகள் ஏற்படுகின்றன. எதிர்க்கட்சிகளுக்கு சுயலாபம் ஒன்றுதான் இலக்கு என்று கூறினார்.