சென்னை: பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவா்களின் படங்களை அச்சிடக்கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, தாக்கல் செய்த மனுவில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 2,500 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கன்களில் முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்களின் புகைப்படங்கள், ஆளுங்கட்சியின் தோ்தல் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அரசு திட்டத்தில் இதுபோல ஆளுங்கட்சியினா் சுய விளம்பரம் செய்வது, இந்திய தோ்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது. இதனால் தகுதியான பயனாளிகளை இந்தத் தொகை சென்றடையாது என்பதோடு முறைகேடு நடக்கவும் வாய்ப்புள்ளது.
எனவே, இந்த வகையான டோக்கன்களை வழங்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை ரூ 2,500 வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை டிசம்பா் 31-ஆம் தேதி மாலைக்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பொங்கல் பரிசுத்தொகைக்கான டோக்கன்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவா்களின் புகைப்படங்களை அச்சிடக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.