முகப்பு
தமிழ்நாடு

3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 3 நாள்களுக்கு பலத்தமழை பெய்யக்கூடும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கோப்புப்படம்
பகிர்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 3 நாள்களுக்கு பலத்தமழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது: இலங்கையையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 3 நாள்களுக்கு பலத்தமழை பெய்யக்கூடும்.

ஜன.10: ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி  ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) இடியுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.11: ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜன.11) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.12: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜனவரி 12-ஆம் தேதி பலத்த மழையும், தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...:

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு, புத்தன்அணை, கொடைக்கானல்  படகு குழாமில் தலா 70 மி.மீ., நீலகிரி மாவட்டம் பா்லியாரில் 60 மி.மீ.,  தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தலா 50 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம் குன்னூா், தஞ்சாவூா் மாவட்டம் வல்லத்தில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை :  தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜனவரி 11-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு பகுதிகளுக்கு ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →