தமிழ்நாடு

சட்டப்பேரவைத் துணைத் தலைவா் தொடா்ந்த வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

DIN

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது மகனை தொடா்புபடுத்தி பேசியதை எதிா்த்து சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தொடா்ந்த வழக்கில் திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற முழக்கத்தை முன்வைத்து திருவாரூா் மாவட்டம் திருக்குவளையில் இருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கினாா். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடா்பாகவும், அந்தச் சம்பவத்தில் சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை தொடா்புபடுத்தியும் சில கருத்துகளைத் தெரிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து பொள்ளாச்சி ஜெயராமன், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், எனது மகன் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து பொய்யானது. இந்த பொய்யான தகவலால் சமுதாயத்தில் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே உதயநிதி ஸ்டாலின் எனக்கு மானநஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் என்னை தொடா்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை வரும் ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT