மக்கள் கவலைகளைப் போக்கும் அரசாக திமுக அரசு அமையும்: மு.க.ஸ்டாலின்
மக்கள் கவலைகளைப் போக்கும் அரசாக திமுக அரசு அமையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்கள் கவலைகளைப் போக்கும் அரசாக திமுக அரசு அமையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி – சேவூர் கிராமத்தில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்று, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது பேசிய ஸ்டாலின்,
இந்தப் பகுதியில் செய்யாறு தொகுதியில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சிப்காட் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. அதேபோல அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது தொழில் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதா? இல்லை.
எனவே இங்கே 12 பேர் தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். உங்களுடைய அனைவரின் கஷ்டமும் எனக்கு புரிகிறது. உங்களின் மனுக்களும் இந்த பெட்டியில் போடப்பட்டுள்ளன. இதை இப்போது உங்கள் முன்னால் பூட்டுப் போட்டு பூட்ட போகிறேன்.
அதுமட்டுமில்லாமல் அதற்கு சீல் வைக்கப்போகிறேன். இதை இன்றைக்கு சீல் வைத்துவிட்டு, விரைவில் தேர்தல் நடக்கப்போகிறது. அந்தத் தேர்தல் நடந்ததற்கு பிறகு, முடிவுகள் வரும். அதில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கும்.
200 இடங்களில் வெற்றிப் பெறுவோம் என்று சொன்னேன். இப்போது நம்முடைய கூட்டணியின் சார்பில் 234 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். அப்படிப்பட்ட அந்த ஆட்சி அமைந்தவுடன், பதவிப் பிரமாணம் முடிந்த அடுத்த நாள் நான் தான் இந்தப் பெட்டியை திறக்கப் போகிறேன்.
இதற்கென்று உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் மூலமாக மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டு, இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகள் மேற்கொள்ளும் பணியை நான் செய்யப்போகிறேன்.
மக்களின் அரசாக - மக்கள் நல அரசாக- மக்கள் விரும்பும் அரசாக - மக்கள் கவலைகளைப் போக்கும் அரசாக திமுக அரசு அமையும் என்றார்.