தமிழ்நாடு

விவசாயிக்கு தரமற்ற விதையை வழங்கியது அ.தி.மு.க. ஆட்சிதான்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

DIN

விவசாயி வீரமணிக்குத் தரமற்ற விதையை வழங்கியது அ.தி.மு.க. ஆட்சிதான் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உண்மை நிலைமை அறியாமலேயே 02.07.2021 அன்று டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான நெல்லை வழங்குக என்ற தலைப்பின்கீழ் விதைநெல் தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். விவசாயி கே. வீரமணி தனக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலத்தில் நடப்பு குறுவை சாகுபடிக்காக 7 ஏக்கர் பரப்பிற்குத் தனியாரிடமிருந்து ADT-36 ரக நெல் விதையை வாங்கி நாற்றாங்காலில் விதைத்துள்ளார். மீதமுள்ள இரண்டு ஏக்கருக்கு செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோ-51 ரக விதைநெல்லை வாங்கி நாற்றாங்கால் தயார்செய்து விதைத்ததாகவும், ஏறத்தாழ விதைத்து 12 நாட்களாகியும் திமுக அரசு வழங்கிய விதை நெல்கள் முளைக்கவில்லை என்றும் விவசாயி வேதனை தெரிவித்துள்ளதாக தொலைக்காட்சிகளில் 02.07.2021 அன்று அவரது அறிக்கை செய்தி வெளியானது.

இதற்கு முன்பாகவே 29.6.2021 அன்று நாளிதழில் ஒன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டாரம் வரகூர் கிராமத்தில் கே.வீரமணி என்பவரின் நாற்றாங்காலில் நெல் விதைகள் முளைப்பு சரியில்லை என்ற செய்தி வெளியான அன்றைய தினமே, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், வேளாண் இயக்குநர் மூலமாக விசாரணை நடத்தி, துறை மூலமாக தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், விதை ஆய்வு துணை இயக்குநர், தஞ்சாவூர், வேளாண்மை உதவி இயக்குநர், திருவையாறு மற்றும் உதவி வேளாண் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு, பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நடவு மேற்கொள்ள இலவசமாக நாற்று வழங்க அரசின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உண்மைத்தன்மையை அறியாமல் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் தனது அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்: இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி கே. வீரமணி, வேளாண்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. அரசின் அலட்சியத்தால் பாதிப்படைந்துள்ள விவசாயி கே. வீரமணிக்கு புதிய நெல் விதையை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும், வீணாகிய விதைநாற்றுக்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். அதேபோல், வேறு எங்கேனும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்வதோடு, எதிர்வரும் காலங்களில் மிகுந்த விழிப்புணர்வோடு, தரமான விதைநெல்களை தமிழ விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக, விவசாயி என்று தன்னை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஒரு தரமான விதைநெல் உற்பத்தி செய்வதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று கூட தெரியாமல் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். விவசாயி கே. வீரமணியால் வாங்கப்பட்ட விதைநெல்லானது முந்தைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வேளாண்மை உதவி இயக்குநர், திருவையாறுவின் மேற்பார்வையில் கோ-51 - 18.05.2020 அன்று விதைத்து விதைப்பண்ணை அமைக்கப்பட்டு, 14.09.2020 அன்று அறுவடை செய்யப்பட்டு 12.10.2020 அன்று அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்புப் பணி மேற்கொண்டு 27.10.2020 அன்று விதையாகத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 03.12.2020 அன்று சான்றட்டை பொருத்தப்பட்டு, அப்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசினால் விவசாயிகளுக்காக இவ்விதைக் குவியல் திருவையாறு வேளாண்மை விரிவாக்க மையத்தின் கிடங்குகளுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

விதைத்து 12 நாட்களாகியும் முளைக்கவில்லை என்று குறிப்பிடும் எதிர்க்கட்சித் தலைவர், இந்த விவரங்களை எல்லாம் அறியாமல் அறிக்கையை அவசரகதியில் வெளியிட்டுள்ளார். முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் இவ்வரசு பொறுப்பேற்ற 56 நாட்களுக்குள் டெல்டா பகுதிகளிலுள்ள விதை / உரம் விநியோகம் செய்யும் தனியார் மற்றும் அரசு விதை விநியோகம் செய்யும் இடங்களில் ஆய்வுகளை அதிகப்படுத்தி, விதை மற்றும் உர மாதிரிகளை எடுத்து, தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதேபோல தரமான விதைகள், தரமான உரங்கள் விநியோகம் செய்ய வேண்டுமென்று இவ்வரசு உறுதி மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு ஜூன் 12 அன்று முதல்வரின் திருக்கரங்களால் காவிரி டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, கண்ணை இமை காப்பதுபோல காவிரி பாசனப் பகுதியை காப்போம் என்ற கொள்கை கொண்ட முதல்வர் காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு பரிசாக ரூபாய் 61 கோடியே 9 இலட்சத்து 25 ஆயிரத்திற்கு சிறப்பு குறுவை தொகுப்புத் திட்டத்தை விவசாயிகளின் நலன்களுக்காக அறிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களும் வரும் நிதிநிலை அறிக்கையிலும் அறிவிக்கப்பட உள்ளது. எனவே, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் இவ்வரசிற்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையுடன் வெளியிடப்பட்ட எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தவறுகள் எதுவும் இவ்வாட்சியில் நடைபெறவில்லை. இவை அனைத்தும் முந்தைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தான் நடைபெற்றது என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குளறுபடிகளுக்கு பொறுப்பேற்க வேண்டியதும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இதற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவரும் அவர்தான். வருங்காலங்களில் இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிடாமல், முழு உண்மைகளை தெரிந்துகொண்டு இனிவரும் காலங்களில் அவசரகதியில் உண்மைத்தன்மையை அறியாமல் அறிக்கை வெளியிடுவதை தவிர்த்து, உண்மையான விவரங்களைக் கேட்டறிந்து அறிக்கை விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT