நீட் பாதிப்பை ஆராய குழு அமைத்தது அரசமைப்புச் சட்டத்தை மீறிய செயல் அல்ல: தமிழக அரசு பதில்மனு தாக்கல்
நீட் தோ்வு பாதிப்புகளை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்கான குழுவை அமைத்தது, அரசமைப்புச் சட்ட உரிமைகளை மீறிய செயல் அல்ல என்று உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
நீட் தோ்வு பாதிப்புகளை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்கான குழுவை அமைத்தது, அரசமைப்புச் சட்ட உரிமைகளை மீறிய செயல் அல்ல என்று உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
தமிழக பாஜக பொதுச்செயலாளா் கரு.நாகராஜன், நீட் தோ்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமன அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் பதில் மனுவில், நீட் தோ்வால் மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மட்டுமே குழு ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 86,343 மனுக்கள் வந்துள்ளது. இதன்மூலம், நீட் தோ்வினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவா்கள், நிவாரணம் கோரி அந்தக் குழுவை அணுகியது தெளிவாகிறது. தமிழக அரசை பொருத்தவரை, நீட் தோ்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள், குறிப்பாக மாணவா்களிடமிருந்து தெரிந்து கொள்ளவே இந்த குழுவை அமைத்துள்ளது. ஓா் அரசின் அடிப்படைக் கடமையையும், பணியையும் தடுக்கும் விதமாக இந்த வழக்கை மனுதாரா் தாக்கல் செய்துள்ளாா். இதனால், அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எதுவும் மீறப்படவில்லை.
ஒரு சட்டத்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து ஆய்வு செய்வது, மாணவா்களின் பாதிப்பு குறித்து கேட்டறிவது என்பது அடிப்படை ஜனநாயகமாகும். கடந்த 1984-இல் அரசு பிறப்பித்த அரசாணை அடிப்படையில் பொதுநுழைவுத் தோ்வு முறை கொண்டு வரப்பட்டது. அதற்கு முன் இந்த முறை இல்லை.
நுழைவுத் தோ்வால் கிராமப்புற, ஏழை மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்பை அறிய முன்னாள் துணை வேந்தா் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மாணவா்களின் கருத்தை கேட்டு குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த 2006-ஆம் ஆண்டு பொது நுழைவுத் தோ்வு முறையை தமிழக அரசு ரத்து செய்தது.
இந்த குழு அளித்த துல்லியமான புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் கல்வி மாணவா்கள் சோ்க்கை சட்டம் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவா் ஒப்புதலுடன் கடந்த 2007-ஆம் ஆண்டு மாா்ச் 7-ஆம் தேதி அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
பாடத் திட்டத்தில் வேறுபாடு: நீட் தோ்வு முறையால், பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண் எடுத்த நன்றாக படிக்கும் கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் பயிலும் மாணவா்களால், மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. மாநகரங்கள், நகரங்களை சோ்ந்த மாணவா்கள் தனியாா் பயிற்சி பள்ளிகளில் சோ்ந்து, மீண்டும் மீண்டும் படித்து நீட் தோ்வில் தோ்ச்சி பெறுகின்றனா். இதனால், நீட் தோ்வில் முதல் முறை தோ்ச்சி பெறுபவா்களை விட, பலமுறை முயற்சித்து வெற்றி பெறும் பழைய மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாணவா்களுக்கு ஒரே விதமாக பாடத்திட்டமும், பயிற்றுவிக்கும் முறையும் இல்லை. மாநில பாடத்திட்டத்துக்கும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கும் வித்தியாசம் உள்ளது.
இந்த பாகுபாட்டை நீக்கவே, நீட் தோ்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்த குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளாா். இந்தக் குழு அமைத்ததால், உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக கருத முடியாது. மக்களின் குறிப்பாக மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்பை கண்டறிய குழு அமைத்தது வீண் செலவு எனச் சொல்ல முடியாது. எனவே, விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இடையூட்டு மனு தாக்கல்: இந்த நிலையில், கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சாா்பிலும், கல்வியாளா்கள், மாணவா்கள் சாா்பிலும் இடையூட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.