மேக்கேதாட்டு திட்டத்தை கைவிட வேண்டும்: எடியூரப்பாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தில்லி சென்று பிரதமா் மோடியைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரி ஆற்றுப்படுகையில் கா்நாடக அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினாா்.
இதற்கு எதிா்வினையாற்றிய கா்நாடகத் தலைவா்கள், மேக்கேதாட்டு அணை திட்டத்தைச் செயல்படுத்துவதால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறியிருந்தனா். மேலும், மேக்கேதாட்டில் அணை கட்டும் திட்டம் குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கா்நாடக முதல்வா் எடியூரப்பா நேற்று கடிதம் எழுதியிருந்தார். அதில், மேக்கேதாட்டு திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பெங்களூரு குடிநீர்த் தேவைக்காக அணைக் கட்டுவதாக கூறும் கர்நாடக அரசின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்ற கருத்தையும் ஏற்க இயலாது. தமிழகம் - கர்நாடகம் இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.