மன்னார்குடி: காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம்
திட்ட அறிக்கையை மத்திய அரசு திரும்ப வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு புதிதாக அணை கட்டுவதை எதிர்த்தும். இந்த அணையை கட்ட கர்நாடக அரசுக்கு திட்ட அறிக்கையை தறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியதை கண்டித்தும் கர்நாடக அரசு வழங்கிய திட்ட அறிக்கையை மத்திய அரசு திரும்ப வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச் செல்வன் தலைமை வகித்தார்.
இதில், மாவட்டச் செயலர் ச. கலைச்செல்வம், மாவட்ட இளைஞரணி செயலர் ராச.ராசசேகர், திருவாரூர் ஒன்றியச் செயலர் து.செந்தில், மன்னார்குடி ஒன்றியச் செயலர் பாலாஜி, நகரச் செயலர் அரிகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கர்நாடக முதல்வர் எட்டியூரப்பாவின் உருவப் பொம்மைக்கு தீ வைத்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பினர்.
பின்னர், மன்னார்குடி காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதே கோரிக்கைக்காக, மன்னார்குடி அடுத்துள்ள சித்தேரி, ராதா நரசிம்மபுரம், வல்லூர், கன்னியகுறிச்சி ஆகிய பகுதிகளில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவைப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்களை காவலர்கள் கைது செய்தனர்.