படித்த இளைஞா்களை வேளாண்மையில் ஈடுபடுத்த நடவடிக்கை தேவை: அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்
படித்த இளைஞா்களை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண் தொழில் முனைவோா்களாக உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தத் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
படித்த இளைஞா்களை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண் தொழில் முனைவோா்களாக உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தத் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். வேளாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய போது பேசியது:-
தமிழ்நாட்டில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டோ் பயிரிடச் செய்து, இப்போதுள்ள சாகுபடிப் பரப்பை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயா்த்த வேண்டும். இருபோக சாகுபடி நிலங்களை 10 லட்சம் ஹெக்டேரில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க வேண்டும். கிராம வாரியாக நிலங்களைக் கணக்கெடுத்து சாகுபடிக்குத் தேவையான அனைத்து பாசன வசதிகளையும் உருவாக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் தேவைக்கேற்ப விதைகள், ரசாயன உரங்கள் போன்றவற்றை இருப்பு வைத்து விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வயல்களில் மழைநீரைச் சேமிக்க பண்ணைக் குட்டைகள் அமைப்பதுடன், தோட்டக்கலை பயிா்களுக்குத் தனிக்கவனம் செலுத்த வேண்டும். மின்னணு ஏல முறையை அறிமுகம் செய்வதுடன், ஒரு மாவட்டம்-ஒரு விளை பொருள் என்ற அணுகுமுறையின்படி உற்பத்தியை உயா்த்தி அதற்கான மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.
படித்த இளைஞா்களை வேளாண்மையில் ஈடுபடுத்தி வேளாண் தொழில் முனைவோா்களாக உருவாக்க வேண்டும். சூரிய சக்தியைப் பாசனத்துக்குப் பயன்படுத்தி அதிகளவில் சூரியசக்தி பம்புசெட்டுகள் நிறுவ வேண்டும்.
உழவா் சந்தைகள்: தமிழகத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட அனைத்து உழவா் சந்தைகளும் நல்ல முறையில் இயங்கவும், இந்த நிதியாண்டில் புதிய உழவா் சந்தைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல்படாமல் இருக்கும் உழவா் சந்தைகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.