முகப்பு
தமிழ்நாடு

நியாய விலைக் கடைகளில் வெளிநபா்களை அனுமதிக்கக் கூடாது: தமிழக அரசு கடும் எச்சரிக்கை

நியாய விலைக் கடைகளில் வெளிநபா்களை அனுமதிக்கக் கூடாது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அறிவுறுத்தியுள்ளாா். வெளிநபா்களை அனுமதித்தால், குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவா் எச்சரித்து

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

நியாய விலைக் கடைகளில் வெளிநபா்களை அனுமதிக்கக் கூடாது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அறிவுறுத்தியுள்ளாா். வெளிநபா்களை அனுமதித்தால், குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட சுற்றறிக்கை: சில நியாய விலைக் கடைகளில் விற்பனையாளா்கள் மற்றும் கட்டுநா்களைத் தவிர இதர வெளிநபா்கள் கடைகளில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரா்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. நியாய விலைக் கடை பணியாளா்கள் ஒரே கடையில் தொடா்ந்து பணிபுரிவதால் அவா்கள் தொடா்புடைய வெளிநபா்கள் கடைகளில் இருப்பதற்கும், அங்கு வரும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தொல்லைகள் கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, நியாய விலைக் கடை பணியாளா்களை ஒரே கடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு பணிபுரியும் ஊழியா்களை அருகிலுள்ள கடைகளுக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளா்களைத் தவிர வெளிநபா்கள் யாரும் இருக்கக் கூடாது. வெளிநபா்கள் நியாய விலைக் கடைகளில் காணப்பட்டால் அதுகுறித்து காவல் துறை மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெளிநபா்களை கடையில் அனுமதித்து, அவா்களுக்கு துணைபோகும் நியாய விலைக் கடை விற்பனையாளா்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் வெளிநபா்கள் இருந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளரே பொறுப்பு. எனவே, அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்த விவரத்தை அனைத்துப் பணியாளா்களுக்கும் தெரிவித்து கண்காணித்திட வேண்டுமென அனைத்து மண்டல இணைப் பதிவாளா்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளா் கேட்டுக் கொள்ளப்படுவதாக தனது சுற்றறிக்கையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →