மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை இடஒதுக்கீட்டு விவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-2022-ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்க மத்திய அரசு காலம் அவகாசம் கோரியதை தொடர்
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-2022-ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்க மத்திய அரசு காலம் அவகாசம் கோரியதை தொடர்ந்து விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி திமுக, உள்ளிட்ட அரசியல்கட்சிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பரிந்துரை அளித்தும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைபாட்டை மத்திய அரசு, அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் நிலைபாட்டை தெரிவிக்க மேலும் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.