முகப்பு
தமிழ்நாடு

திருவள்ளூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடி: இளைஞர் கைது

திருவள்ளூரில் வேலைக்குச் செல்வோரை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி ஆணையும் வழங்கி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை சைபர் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
திருவள்ளூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடி: இளைஞர் கைது
பகிர்:

திருவள்ளூர்: திருவள்ளூரில் வேலைக்குச் செல்வோரை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி ஆணையும் வழங்கி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை சைபர் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட சைபர் பிரிவு காவல்துறையினர் தரப்பில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது,  திருவள்ளூர் அருகே திருநின்றவூர் அடுத்த நடுகுத்தகை கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத்தின் மகன் பார்த்தசாரதி (21). இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு எழுதி, முடிவிற்காக காத்திருந்தாராம். 

இந்த நிலையில் பார்த்தசாரதி திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக தம்மை காட்டி கொள்ளும் திருப்பாச்சூர் காலனியை சேர்ந்த அசோகன் மகன் அரவிந்தன் (25) என்பவரை அணுகினராம்.

அதையடுத்து சில நாள்களில் பார்த்தசாரதியை செல்லிடப்பேசியில் அரவிந்தன் தொடர்பு கொண்டு, அவர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனவும், அதனால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி பார்த்தசாரதியை நம்ப வைத்துள்ளார். 

மேலும், அவரிடமிருந்து கூகுள் ஃபே மற்றும் நேரிலும் ரூ.4.67 லட்சம் வாங்கினாராம். மேலும் அரவிந்தன் போலியான பணிநியமன ஆணை தயார் செய்து பார்த்தசாரதிக்கு வழங்கியுள்ளார். இந்த பணி நியமன ஆணை குறித்து விசாரித்ததில் போலியானது என தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பார்த்தசாரதி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரத்யேக செல்லிடப்பேசி- 63799 04848 தொடர்பு கொண்டுள்ளார். அதையடுத்து போலி பணிநியமன ஆணை நகலையும் கட்செவியில் அனுப்பினராம்.

உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சு.லில்லி தலைமையில் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சு.மனோஜ் பிரபாகர் தாஸ் மற்றும் காவல்துறையினர் அரவிந்தனை கைது செய்தனர். அப்போது, அவரிடமிருந்து ஒரு செல்லிடப்பேசி, இரண்டு சிம் கார்டுகள் மற்றும் அரசு விண்ணப்பபடிவங்கள், போலி சான்றிதழ்கள் ஆகியவைகளையும் கைப்பற்றினர்.

மேலும், விசாரணையில் அரவிந்தன் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக ஊர்க்காவல் படையில் பணிக்கு சேர விண்ணப்பித்து இருந்ததாகவும், அது சம்பந்தமாக அடிக்கடி மாவட்ட காவல் அலுவலகம் வந்து சென்றபோது, அலுவலக ஊழியர்கள் சிலரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பழக்கத்தை தவறான வழியில் பயன்படுத்தி காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாக 10 பேரையும், தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக 8 பேரையும் என மொத்தம் 18 பேர்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து அரவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளை சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அடைத்தனர். மேலும் திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலக ஊழியர்கள், யாருக்கேனும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.