நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து பிளஸ் 2 தேர்வு தொடர்பாக கட்சிகள், பெற்றோர், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகஷ் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இவர்கள் அனைவரிடமும் பெறப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் அறிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதலவர் மு.க ஸ்டாலின் இன்று அறிவித்தார். மேலும் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அக்குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய காலகட்டத்தில் எந்த நுழைவுத்தேர்வு நடந்தாலும் மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்படும். எனவே, நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.