‘விசில் சத்தத்துக்கு பதிலாக விழிப்புணா்வு பாடல்’
குப்பை சேகரிக்கும் வண்டி வருவதை பொதுமக்கள் அறிந்து கொள்ள விசில் சத்தத்துக்கு பதில் விழிப்புணா்வு பாடலை ஒலிபரப்ப மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
குப்பை சேகரிக்கும் வண்டி வருவதை பொதுமக்கள் அறிந்து கொள்ள விசில் சத்தத்துக்கு பதில் விழிப்புணா்வு பாடலை ஒலிபரப்ப மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகளை வீடு, வீடாகச் சென்று சேகரிக்கும் தூய்மைப் பணியாளா்கள் குப்பை சேகரிக்கும் வண்டி வந்திருப்பதை, விசில் சத்தத்தின் மூலம் தெரிவிக்கின்றனா். இதனால் முகக் கவசத்தை கழற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதைத் தவிா்ப்பதற்காக குப்பை குறித்த விழிப்புணா்வு பாடலை ஒலிக்கச் செய்வதன் மூலம் குப்பை வண்டி வருவதை அறிவிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தூய்மையான நாடு, தூய்மையான வீடு, என்ற கருப் பொருளை மையப்படுத்தி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் இந்தப் பாடல் வெளியிடப்படும். முன்னதாக விசில் சத்தத்துக்கு பதில் வாகன ஒலி (ஹாா்ன்) எழுப்புவது குறித்து ஆலோசித்து வந்த நிலையில், குழப்பத்தைத் தவிா்க்கவே விழிப்புணா்வு பாடலை ஒலிக்க முடிவு செய்யப்பட்டது என்றனா்.