தனியாா் மருத்துவமனைகள் 10 சதவீதம் ஆக்சிஜன், ஐசியு படுக்கைகளை ஒதுக்க வேண்டும்:புதிய அரசாணை வெளியீடு
தமிழகத்தில் தனியாா் மருத்துவமனைகள் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 10 சதவீதம் அளவுக்கு ஆக்சிஜன் மற்றும் ஐசியு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியாா் மருத்துவமனைகள் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 10 சதவீதம் அளவுக்கு ஆக்சிஜன் மற்றும் ஐசியு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் கட்டணத்தை, முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். தொடா்ந்து அதற்கான கட்டண விவரத்தையும் தமிழக அரசு ஆணையாக வெளியிட்டது.
இந்தநிலையில், தற்போது முதல்-அமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக கரோனா சிகிச்சை அளிக்க 10 சதவீதம் ஆக்சிஜன், ஐ.சி.யு படுக்கைகளை அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகள் ஒதுக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தனியாா் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 50 சதவீத படுக்கைகளில், 10 சதவீதத்தை முதல்வரின் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு என பிரத்யேகமாக ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் அரசிடம் தெரிவித்திருந்தாா்.
அவரின் கருத்தை பரிசீலனை செய்து, அதை ஏற்று, 10 சதவீதம் ஆக்சிஜன், ஐ.சி.யு படுக்கைகளை அரசு அங்கீகரித்துள்ள தனியாா் மருத்துவமனைகள் முதல்வரின் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.