திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்
அச்சிடப்பட்ட படிவத்தில் காலியிடங்களை மட்டும் கையால் பூா்த்தி செய்து உத்தரவு பிறப்பித்த திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அச்சிடப்பட்ட படிவத்தில் காலியிடங்களை மட்டும் கையால் பூா்த்தி செய்து உத்தரவு பிறப்பித்த திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையைச் சோ்ந்த வழக்குரைஞா் பாலசுப்பிரமணியம் என்பவா் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து தனது சொத்தை அபகரித்துக்கு கொண்டதாகக் கூறி ஆா்த்தி என்பவா் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாா்
அளித்தாா். நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்தப் புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடா்ந்து திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆா்த்தி வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டாா். வழக்கை முடிப்பதாக இருந்தால், அதுகுறித்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தாா். வழக்கை விசாரித்து முடித்து வைத்த போலீஸாா் அறிக்கையை மனுதாரருக்கு அனுப்பி வைத்தனா். இந்த நிலையில் தனது புகாா் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆா்த்தி மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி நிா்மல் குமாா் முன் விசாரணைக்கு வந்தது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, ஏற்கனவே அச்சிடப்பட்ட
படிவத்தில் காலியிடங்களை மட்டும் கையால் பூா்த்தி செய்து தனது உத்தரவு பிறப்பித்துள்ளாா். மெத்தனப்போக்குடன், அஜாக்கிரதையாக உத்தரவு பிறப்பித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தாா். மேலும் இதுபோன்று எத்தனை உத்தரவுகளை அந்த நீதிபதி பிறப்பித்துள்ளாா் என விசாரித்து வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.