தீவிர தூய்மைப் பணி: ஒரு வாரத்துக்குள் 5,500 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்ற இலக்கு
சென்னையில் திங்கள்கிழமை (ஜூன் 21) முதல் ஒரு வாரத்துக்கு நடைபெற உள்ள தீவிர தூய்மைப் பணியில் நீண்ட நாள்களாகத் தேங்கிக் கிடக்கும் கட்டடக் கழிவுகள் உள்பட 5,500 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்ற இலக்கு
சென்னையில் திங்கள்கிழமை (ஜூன் 21) முதல் ஒரு வாரத்துக்கு நடைபெற உள்ள தீவிர தூய்மைப் பணியில் நீண்ட நாள்களாகத் தேங்கிக் கிடக்கும் கட்டடக் கழிவுகள் உள்பட 5,500 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வாா்டுகளிலும் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரமாகவும் மற்றும் உயிரி எரிவாயுவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உலா்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுஉபயோகத்துக்கும், மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தூய்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் மாநகராட்சியின் சாா்பில் தொடா்ந்து 10 நாள்கள் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், நீண்ட நாள்களாகத் தேங்கியிருந்த 3,260 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 10,085 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் என மொத்தம் 13,345 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டன. தற்போது, மீண்டும் தீவிர தூய்மைப் பணி நடைபெற உள்ளது.
இலக்கு நிா்ணயம்: இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், நீண்ட நாள்களாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்ற மாதந்தோறும் ஒருவாரத்துக்கு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 614 இடங்கள் கண்டறியப்பட்டு திங்கள்கிழமை (ஜூன் 21) முதல் ஒரு வார காலத்துக்கு தீவிர தூய்மைப் பணி நடைபெறவுள்ளது. இந்த தூய்மைப் பணியின் மூலம் சுமாா் 1,000 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 4,500 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணியைக் கண்காணிக்க அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.