தமிழ்நாடு

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை 

DIN

பல்லடம்: ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருந்த போதிலும் விவசாயத்திற்கு என்று தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்து இருப்பது வரவேற்கதக்கது. இதன் மூலம் விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்களுக்கு நிவாரணம் கிடைப்பதோடு விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கடந்த ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தமிழகம், கேரள மாநில முதல்வர்கள் நேரடியாக சந்தித்து பேசி நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் இத்திட்டத்தை நிறைவேற்ற சுமூக தீர்வு காண வேண்டும்.

பல்லடம், பொங்கலூர் பகுதியில் தற்போது வெங்காய நடவு காலம் ஆகும். கூட்டுறவு சங்கம் மற்றும் உரக்கடைகளில் ஒரு மூட்டை உரம் கூட இருப்பு இல்லாத நிலை உள்ளது. வெங்காய சாகுபடிக்கு போதிய உரம் போடவில்லை என்றால் மகசூல் கிடைக்காது பயிர் சேதம் அடைந்துவிடும்.

அரசு 50 கிலோ கொண்ட டி.ஏ.பி.உரத்தை ரூ.1200-க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. ஆனால் வெளிசந்தையில் ரூ.1900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வேளாண்மை துறை அதிகாரிகள் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் உரம் விற்பனைக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாவிபாளையம் ஊராட்சி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வெங்காய சாகுபடி செய்து போலி விதையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தனியார் விதை நிறுவனம் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்குவதாக உறுதி அளித்து அதன்படி சிலருக்கு இழப்பீட்டு தொகை வழங்கி இருப்பதாக தெரியவருகிறது.

பாதிப்படைந்த மற்ற விவசாயிகளுக்கும் இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும். தவறினால் பாதிப்படைந்த விவசாயிகளை திரட்டி விரைவில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

கட்சியின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன்,பொங்கலூர் ஈஸ்வரமூர்த்தி, சுப்பிரமணி, மாநில இளைஞரணி கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT