முகப்பு
தமிழ்நாடு

கோவில் சொத்துகளுக்கு நீதிமன்றமே பாதுகாப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகளுக்கும், சிலைகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
பகிர்:


சென்னை: கோயில் சொத்துகளுக்கும், சிலைகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கடந்த 1863- ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணி, அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு 60 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினார். இந்த நிலம் தாராபுரம் தாலுகாவில் பெரிய குமாரபாளையம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்ய ஸ்ரீரங்க கவுண்டர்,  ராமசாமி கவுண்டர் ஆகிய இருவருக்கு உள் வாடகைக்கு  வழங்கப்பட்டது.

கடந்த 1960-ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது இந்த நிலத்தின் மீதான பட்டா தங்களுக்கு வழங்க வேண்டும் என ஸ்ரீரங்க கவுண்டரும், ராமசாமி கவுண்டரும், இது கோயில் சொத்து என கோரி கோயில் நிர்வாக அலுவலரும் ஈரோடு நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

ஆனால் நீதிமன்றம் ஆங்கில அரசால் கோவிலுக்கு வழங்கப்பட்ட தானம் செல்லுபடியாகும் எனவும் அந்த நிலம் கோயில் மூலவருக்கேச் சொந்தம் எனவும் மேல்வாரம் மற்றும் குடிவாரம் உரிமையை கோயிலுக்கு வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உறுதி செய்தன.

இதனையடுத்து ஈரோடு முன்சீப் நீதிமன்றத்தில், விளைநிலத்தில் சுவாதீனத்தை கோயிலுக்கு வழங்க கோரி கடந்த 1988-ஆம் ஆண்டு கோயில் நிர்வாக அலுவலர் மனு தாக்கல் செய்தார். அதேபோல, ஸ்ரீரங்க கவுண்டர், 'இடைப்பட்ட காலத்தில் 60 ஏக்கர் நிலத்தில் 'எதிரிடை பாத்தியம்' என்ற முறையில் ஊர்ஜிதமாகி விட்டது எனவே தனக்குத்தான் நிலத்தின் மீது உரிமை உள்ளது எனக்கூறி மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், நிலத்தின் மீது பழனி பாலதண்டாயுதபாணி கோயில் தேவஸ்தானத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது.  ஸ்ரீரங்க கவுண்டர் ராமசாமி கவுண்டர் ஆகியோருக்கு  உரிமை இல்லை என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மனுதாரர்கள் தரப்பில், மனுதாரர்கள் பல ஆண்டுகளாக இந்த நிலத்தில் சாகுபடி செய்து வருவதால் மனுதாரர்களுக்கு தான்  நிலத்தின் மீதான உரிமை உள்ளது.

ஆங்கில அரசால் வழங்கப்பட்ட நிலம் பழனி பால தண்டாயுதபாணி சாமிக்கு வழங்கப்படவில்லை. மலையடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி சாமிக்கு தான் வழங்கப்பட்டது. பாலதண்டாயுதபாணி சாமிக்கும்,  சுப்பிரமணியசாமியான திருமூர்த்தி சாமிக்கும் வித்தியாசம் உள்ளது. 

மேலும், கடந்த 1963-ம் ஆண்டு கோயிலின் அப்போதைய துணை ஆணையர் சோமசுந்தரம் பிள்ளை எழுதிய புத்தகத்தில், இந்த நிலம் கோயிலுக்கு சொந்தம் என்று குறிப்பிடவில்லையென வாதிட்டப்பட்டது. அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில், பாலதண்டாயுதபாணியும், சுப்பிரமணிய சுவாமியும் திருமூர்த்தியும் ஒரே சாமிதான். பழனி மலை உச்சியிலும், மலை அடிவாரத்திலும்  உள்ள கோயில்களை ஒரே தேவஸ்தானம் தான் நிர்வகிக்கிறது. இரண்டு கோயில்களுக்கும் ஒரே செயல் அதிகாரி தான் உள்ளதாக வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், கடந்த 1963-ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில் இந்த நிலம் கோயிலுக்குச் சொந்தம் இல்லை என்ற அடிப்படையில் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்திய சாட்சி சட்டத்தின்படி, 1963-ஆம் ஆண்டு அந்த புத்தகம் வெளியானது என்ற தகவல் மட்டுமே உண்மையாக கருதப்படுமே தவிர, புத்தகத்தில் உள்ள தகவல் அனைத்தும் உண்மை என கருத முடியாது. 

அது உண்மை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டியது மனுதாரர்களின் கடமை. பழனி மலையடிவாரத்தில் உள்ள மும்மூர்த்தி சாமியும், மலைக்கு மேல் உள்ள பாலதண்டாயுதபாணி சாமியும் ஒரே தேவஸ்தான அதிகாரிகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

எனவே, இந்த 2 சாமிகளும் வெவ்வேறானவை என்ற மனுதாரர்கள் தரப்பு வாதம் ஏற்புடையது அல்ல. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பொதுவாக குழந்தைகளுக்கு நீதிமன்றமே பாதுகாவலர் என்ற சட்டம் உள்ளது.

குழந்தைகளை பொறுத்தவரை அவர்களது, உடலுக்கும், சொத்துகளுக்கும் நீதிமன்றமே பாதுகாவலர். அதுபோல கர்ப்பகிரகத்தில் உள்ள சாமியை பகதர்கள் குழந்தையாகவே பார்க்கின்றனர். அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என சொல்கின்றனர். அதன் அடிப்படையில், கோயில் கர்ப்பகிரகத்தில் உள்ள சாமி, சிலைகள், சொத்துகளுக்கு நீதிமன்றமே பாதுகாப்பு. எனவே மனுதாரர்கள் நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →