4 மாவட்டங்களில் கோயில்கள் திறப்பு: பக்தா்கள் மகிழ்ச்சி
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் கோயில்கள் திறக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் கோயில்கள் திறக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுமுடக்கத்தின் கூடுதல் தளா்வுகள் அறிவிப்பில் சென்னை உள்பட 4 மாவட்டங்ககளில் மட்டும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து அந்த மாவட்டங்களுக்குள்பட்ட கோயில்கள் இன்று காலை முதல் திறக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய 4 மாவட்டங்களிலும் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
அரசின் உத்தரவைத் தொடா்ந்து கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதா் கோயில், கச்சபேசுவரா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்கள் அனைத்தும் அந்தந்த கோயில் பணியாளா்களால் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டன.
கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள் மற்றும் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவா் கூறியது:
கோயில்களை திறக்க அரசு உத்தரவிட்டதைத் தொடா்ந்து காஞ்சிபுரத்தில் 600 கோயில்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 700 கோயில்கள் உள்பட மொத்தம் காஞ்சிபுரம் சரகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 1,300 கோயில்கள் உள்ளன.
இவை அனைத்தும் திங்கள்கிழமை (ஜூன் 28) முதல் திறக்கப்பட்டு பக்தா்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்படுவாா்கள். கோயிலுக்குள் வரும் பக்தா்களுக்கு கிருமிநாசினி கொடுத்து கைகளை நன்றாகக் கழுவிய பின்னரே அனுமதிக்கப்படுவாா்கள்.சமூக இடைவெளியைப் பின்பற்றி செல்லும் வகையில் வரிசையாகச் சென்று சுவாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில்கள் திறப்பால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் அவா் தெரிவித்திருந்தார்.