தமிழ்நாடு

இலவசக் கல்வி-மருத்துவம், மதுவிலக்கு:  பாமகவின் தேர்தல் அறிக்கை

DIN

இலவசக் கல்வி, இலவச மருத்துவம், தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பது உள்ளிட்டபல்வேறு வாக்குறுதிகள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாமகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக கூட்டணியுடன் இணைந்து சந்திக்கிறது பாமக. அதிமுக தலைமையிலான கூட்டணியில் 23 தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளது.

இந்த நிலையில், பாமக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையின்  முக்கிய அம்சங்கள்: 

மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்.

இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.500 வீதமும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதமும் நிதியுதவி அளிக்கப்படும்.

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள 9ஆம் வகுப்பில் இருந்து சிறப்புப் பயிற்சி.

அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.
உயர்கல்வி கற்பதற்கான பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை. கடன் தொகையை தமிழக அரசே வங்கிகளுக்குச் செலுத்தும்.

வருமான வரம்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு உயர்கல்வி இலவசமாக வழங்கப்படும்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குத் தரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடித்து நல்ல தீர்ப்புப் பெறத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுவது போன்று, அண்ணா பல்கலைக் கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும்.

தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும்.

வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். கொரோனா பாதிப்புக்குப் பிந்தைய சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

50 வயதைக் கடந்த அனைவருக்கும் முழு மருத்துவப் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அனைத்து வேளாண் விளைபொருட்களும் அரசால் கொள்முதல் செய்யப்படும்.
வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வேளாண்மை சார்ந்து 4 அமைச்சகங்கள் ஏற்படுத்தப்படும்.
60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும்.
காவிரி,  கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு, ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்குவதற்காகவும், இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காகவும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

நரிக்குறவர்களுக்கு அவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் தமிழக இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.
தமிழ்நாட்டின் நிர்வாக வசதிக்காக 2ஆவது தலைநகராகத் திருச்சியும், 3ஆவது தலைநகரமாக மதுரையும் அறிவிக்கப்படும்.

 தமிழ்நாட்டில் அண்மையில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மாவட்டங்களும் மறுசீரமைக்கப்படும். ஒரு மாவட்டத்தில் 12 இலட்சம் பேர் வாழும் வகையில் மாவட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு, மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
புதிய அரசு பதவியேற்று ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தவுடன் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வெற்றிபெறும்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு சிப்காட் தொழில் வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். இதன் மூலம், அந்தந்தப் பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.

தொழில் வளர்ச்சிக்காகத் தமிழகம் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் தனித்தனிப் பொருளாதார ஆணையரகங்களாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் பொருளாதார ஆணையராக நியமிக்கப்படுவார். மண்டல அளவில் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதுதான் இந்த ஆணையரகங்களின் பணிகளாகும்.

தமிழக அரசுத் துறைகளில் நீக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்துதல், காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்புதல் ஆகியவற்றின் மூலம் 5 இலட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்குக் காலமுறை ஊதியத்துடன் கூடிய வேலை உறுதி செய்யப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்தும் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும்.

இளைஞர்கள் கூட்டாகத் தொழில் தொடங்கச் சிறப்பு அமைப்பினை ஏற்படுத்தி, இளைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் வாழும் பகுதிக்கு ஏற்ற தொழில்களைக் கூட்டுறவு முறையில் ஏற்படுத்துதல். 100, 500, 1000 இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டுறவுச் சங்கங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் தொழில்தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துச் சென்னையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். கோவை மற்றும் திருப்பூரில் ஆடை சார்ந்த தொழில்களும், நீலகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுலா சார்ந்த தொழில்களும் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் 2 இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.


 தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மகளிருக்கான மகப்பேறு விடுப்புக்காலம் தற்போதுள்ள 9 மாதங்களில் இருந்து ஓராண்டாக அதிகரிக்கப்படும்.

40 வயதைக் கடந்த அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் முழு மருத்துவப் பரிசோதனை இலவசமாகச் செய்யப்படும். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என குடும்பத் தலைவிகள் விரும்பிய இடங்களில் இந்த மருத்துவப் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.

சென்னையைப் போன்று கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் மெட்ரோ இரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்படும் முறையை மாற்றி, மாதத்திற்கு ஒருமுறை மின் பயன்பாட்டைக் கணக்கிடும் முறை அறிமுகப் படுத்தப்படும்.

60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாதம் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக, அவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
கணவனை இழந்த பெண்களுக்கும், ஆதரவற்ற அனாதைகளுக்கும், உடல் ஊனமுற்ற வேலை செய்ய இயலாதவர்களுக்கும், இதே போல மாதம் ரூ. 2500 ஓய்வூதியமாக வழங்கப்படும்.

கிராமப்புறக் கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளின் ஓய்வூதியத்தை இப்போதுள்ள ரூ.3 ஆயிரத்திலிருந்து, ரூ.5 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பசுவின் பாலுக்கு லிட்டருக்கு 36 ரூபாயும், எருமைப் பாலுக்கு லிட்டருக்கு 45 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும். 

பட்டு நெசவாளர்களுக்கு 30%கூலி உயர்வு வழங்கப்படும். மேலும், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்க வகை செய்யப்படும்.

தமிழ்நாடு மீனவர்கள் நல வாரியத்தின் சார்பில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளும் இரட்டிப்பாக்கப்படும்.

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு வழிகாட்டத் தனி மையங்கள் அமைக்கப்படும்.

தமிழ்த் திரையுலகில் ரூ.3,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட சுமார் 1500 படங்கள் முடங்கிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படங்களைக் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வெளியிடத் திரையுலக அமைப்புகளுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

 ஒரு வாரத்தில் இரு பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிடப்பட்டால், 4 சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிடப்படுவது, திரைத்துறை அமைப்புகளின் கருத்தொற்றுமையுடன் உறுதி செய்யப்படும்.

பத்திரிகையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசு சார்பில் ஊடகங்களுக்கு வழங்கப்படும் விளம்பரங்களின் மொத்த மதிப்பில் 3% பத்திரிகையாளர் நல நிதிக்கு வழங்கப்படும். இந்த நிதியைக் கொண்டு பத்திரிகையாளர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்.

சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசல், காற்று மாசுமாடு, திடக்கழிவு, நீர்மாசுபாடு, குடிநீர்ப் பற்றாக்குறை, குடிசைகள் இடிப்பு, அதிகாரப்பகிர்வு இல்லாமை என்பன மிக முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன. இவற்றைப் போக்கிச் சென்னையை அழகு நகரமாக மாற்ற பா.ம.க. நடவடிக்கை எடுக்கும். 

சென்னைப் பழவேற்காடு ஏரி, பிச்சாவரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அலையாற்றிக் காடுகளையும், அதையொட்டிய கடல் மற்றும் நிலப் பகுதிகளையும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க வசதியாகப் புதிய சுற்றுலாத் திட்டம் உருவாக்கிச் செயல்படுத்தப்படும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யப் பரிந்துரைக்கும் தீர்மானத்தைத் தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது. 7 தமிழர்களும் மிகவிரைவில் விடுதலை செய்யப்படுவதை பா.ம.க. உறுதி செய்யும்.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3ஆவது வாரத்தில் சென்னையில் தமிழிசை விழா நடத்தப்படும். இதற்காகச் சென்னையில் தமிழக அரசின் சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய தமிழிசை அரங்கம் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT