உடுமலையில் மலைத் தேனீ கடித்து 10 குழந்தைகள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை அருகே உள்ளது பாலப்பட்டி கிராமம். இங்கு அருள்மிகு காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று காலையில் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென அந்தப் பகுதியில் உள்ள தென்னை மரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மலைத் தேனீ பறந்து வந்து கோவில் விழாவில் கூடியிருந்த பொதுமக்களைக் கடிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்குமிங்குமாக தலைதெறிக்க ஓடினர்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட பொதுமக்கள் இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் மற்றும் ஆம்புலன்சுகளில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் மருத்துவமனை வளாகத்தில் கூடியதால் அங்குப் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த பொதுமக்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. இதில் 10 குழந்தைகள் உள்பட சுமார் 200 மேற்பட்டோருக்கு ஊசி மூலம் மருந்துகள் செலுத்தப்பட்டது.
இதில் ஐந்துக்கு மேற்பட்ட முதியோர்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர். குறிப்பாகப் பொதுமக்கள் அழைத்துவரப்பட்ட வாகனங்கள் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு வந்த நூற்றுக்கணக்கான தேனீக்கள் அங்குக் கூடியிருந்தவர்களைக் கடிக்கத் தொடங்கியது.
இதனால் அரசு மருத்துவமனையிலிருந்த நோயாளிகள் பொதுமக்கள் அனைவரும் தலைதெறிக்கச் சாலைக்கு ஓடி வந்தனர். தென்னை மரத்தின் உயரத்தில் கூடு கட்டி இருந்த மலைத் தேனீக்களை மர்ம நபர்கள் சிலர் கல்லெறிந்து கலைத்ததே இந்த சம்பவத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உடுமலை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.