மணப்பாறை அருகே எருது உயிரிழப்பு: தாரை தப்பட்டையுடன் இறுதிச்சடங்கு
மணப்பாறை அடுத்த வையம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கம்பளத்து நாயக்கர், கோனார் சமூகத்தினர் தங்களது வீடுகளில் எருதுகளை “சலகர் மாடு” என்று வழிபாட்டு தெய்வங்களாக வளர்த்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கம்பளத்து நாயக்கர், கோனார் சமூகத்தினர் தங்களது வீடுகளில் எருதுகளை “சலகர் மாடு” என்று வழிபாட்டு தெய்வங்களாக வளர்த்து வருகின்றனர்.
இந்த எருதுகளுக்கு மூக்கணாங்கயிறு குத்துவதும், காது அறுப்பதும், வண்டியில் பூட்டுவதும், தார்குச்சியால் அடிப்பதும், இனப்பெருக்கத்திற்கும் விடுவதும் இல்லை. இவை அவர்களின் குலதெய்வமாகவே வளர்க்கப்படுகிறது. எருது ஓட்டத்தின்போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இந்த எருதுகள் வயது முதிர்ந்து உயிரிழந்த பின் அவற்றின் பிடி மண் எடுத்து அவற்றை எருதுகுட்டைச்சாமியாக வைத்து வருடந்தோறும் தை மாதத்தில் புத்தாடை, தேங்காய், பழம் வைத்து வழிபடுவது வழக்கம். அனைத்து நாயக்கர், கோனார் சமூக மந்தைகளும் ஒன்றிணைந்த வழிபாட்டு முறையின்போது அனைவரின் எருதுகளும் எருதுகுட்டைச்சாமி இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கு எருது ஓட்டம் நடைபெறும்.
இந்நிலையில் காட்டுநாயக்கர் புளியம்பட்டி மந்தையான வையம்பட்டி அடுத்த கோடாங்கிநாயக்கர் களத்தில் வசித்துவரும் விவசாயி பொம்மநாயக்கர் மகன் சின்னாசாமி, 24 ஆண்டுகளாக வளர்த்து வந்த எருது நேற்று மாலை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது.
உயிரிழந்த எருதுக்கு சந்தனம், மஞ்சள் பூசி, கம்பு, பால், தேங்காய், பழம் படைத்து மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டு பெண்கள் ஒப்பாரி வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின் அவர்களின் குலவழக்கப்படி தேவராட்டம் நடைபெற்றது. பின் பல்லக்கில் எருது எடுக்கப்பட்டு தாரை தப்பட்டைகளுடன் கொண்டு இறுதியாத்திரைக்குபின் ஊர் பொது இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.