உயிர் உள்ளவரை காவிரியை காக்கப் போராடியவர் கருணாநிதி: மு.க. ஸ்டாலின்
உயிர் உள்ளவரை காவிரி உரிமையைக் காக்கப் போராடியவர் கருணாநிதி என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூர்: உயிர் உள்ளவரை காவிரி உரிமையைக் காக்கப் போராடியவர் கருணாநிதி என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் வெள்ளிக்கிழமை காலை பிரசாரம் செய்த அவர் பேசியது:
காவிரி உரிமையை மீட்டு காப்பாற்றியவர் கருணாநிதி. அந்த உரிமையை மத்திய அரசிடம் அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி.
காவிரி பிரச்னை தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கக் கோரி 1970 ஆம் ஆண்டு முதல் கருணாநிதி போராடி வந்தார். அதன் விளைவாக 1990 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் இடைக்காலத் தீர்ப்பைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி. இதேபோல இறுதித் தீர்ப்பையும் கருணாநிதியே பெற்றுத் தந்தார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து காவிரி மீட்புப் பயணம் நடத்தியது நாங்கள்தான்.
மேகேதாட்டு அணைக் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்பதால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி பிரதமரை சந்திக்கலாம் என கோரினேன். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
கருணாநிதி தன் உயிர் உள்ளவரை காவிரி உரிமைக்காகப் போராடினார்.
எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே விவசாயி என்றால் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து குரல் கொடுத்திருக்க வேண்டும். மாறாக தில்லியில் போராடும் விவசாயிகளைப் பார்த்து இடைத்தரகர்கள் என கொச்சைப்படுத்துகிறார்.
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்காகப் பல்வேறு திட்டங்கள் உறுதி அளிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யுமாறு நாங்கள் கோரி வந்தும், எடப்பாடி பழனிசாமி பத்தாண்டுகளாக அறிவிக்கவில்லை. விவசாய கடன்களை தள்ளுபடி செய்யுமாறு விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். பின்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அத்தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அரசு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. விவசாய கடன் தள்ளுபடி குறித்து நாங்கள் அறிவித்த பிறகுதான் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
விவசாய கடன்கள் தள்ளுபடி குறித்து நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் வாக்குறுதி அளித்தோம். அப்போது திமுக தவறான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். இப்போது எப்படி அவர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார் என்றார் ஸ்டாலின்.