சைதை துரைசாமியின் வேட்பு மனு ஏற்பு
சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்பட்டது.
சென்னை: சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் சைதை துரைசாமி. இவர் மார்ச் 15-ஆம் தேதி கிண்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது.
சைதாப்பேட்டை பேரவைத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த சைதை துரைசாமியின் பிரமாணப் பத்திரத்தில் வருமான வரித்துறை தொடர்பான ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் அதிகாரிகள் சைதை துரைசாமிக்கு கால அவகாசம் அளித்து வேட்பு மனு பரிசீலனையை நிறுத்திவைத்திருந்தனர்.
முன்னதாக, சைதை துரைசாமி வரி பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது பிரமாணப் பத்திரத்தில் அது பற்றி எதுவும் கூறப்படவில்லை என்பதால், அது குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பிறகு சைதை துரைசாமி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்துக்குப் பின், வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.