ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
காஞ்சிபுரம்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பேருந்து நிலையம் முன்பாக திமுக வேட்பாளர்களான சி.வி.எம்.பி.எழிலரசன்(காஞ்சிபுரம்)க.சுந்தர்(உத்தரமேரூர்) மதுராந்தகத்தில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் மல்லை சத்யா, செய்யாறில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர்.பாபு ஆகியோருக்கு வாக்குகள் சேகரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது:
இத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமையப்போவது உறுதியாகி விட்டது.மக்களின் எழுச்சி என்னை வியக்க வைக்கிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் 75 ஆயிரம் சாலைப்பணியாளர்கள், நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காகவே 75 ஆயிரம் இளைஞர்கள், 25 ஆயிரம் திருக்கோயில் பணியாளர்கள் என ஆண்டுக்கு 10 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
காலிப்பணியிடங்களாக உள்ள 3.50 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தோம். அறிவித்த மறுநாளே எடப்பாடி கே.பழனிசாமி ரூ.1500 தருவதாக அறிவித்தார். ஆட்சிக்கு வரப்போவதில்லை. எதையாவது ஒன்றை அறிவிப்போமே என்று சொல்லியிருக்கிறார். ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை,ரூ.1500 தரப்போவதும் இல்லை. விரைவில் ஹெலிகாப்டர்,ஏரோப்ளேன் தருவோம் என்றும் எடப்பாடி சொன்னாலும் சொல்லுவார்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.மதுராந்தகத்தில் தொழிற்பேட்டையும், அரசுக் கலைக் கல்லூரியும் ஏற்படுத்தப்படும்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கிய போதே குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதிமுக அரசு ரூ.1000 மட்டும் அப்போது தந்தது. திமுக ஆட்சி அமைந்தவுடன் வரும் ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளன்று மீதம் இருக்கும் ரூ.4 ஆயிரமும் தருவோம்.
பொதுமக்கள் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்:
கரோனா நோய்த்தொற்றின் 2 ஆவது அலை தொடங்கியிருக்கிறது. எந்த இடத்துக்கு போனாலும் முகக் கவசம் இல்லாமல் போகாதீர்கள். பயமின்றி கரோனா நோய்த்தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். எந்தப் பக்க விளைவுகளும் இல்லை. உங்களின் சகோதரனாக எனது அன்பு வேண்டுகோள் என்னவெனில் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.