ஊழல் செய்வதில் ஜெயலலிதாவை மிஞ்சிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி: ஸ்டாலின் பேச்சு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன் உள்பட சூளகிரியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதி சூளகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், பர்கூர் மதியழகன், வேப்பனப்பள்ளி முருகன், ஓசூர் ஒய்.பிரகாஷ் மற்றும் ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம், தளி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து சூளகிரியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
Advertisement
உங்களையெல்லாம் தேடி, நாடி நான் வந்துள்ளேன். உரிமையுடன் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். உணர்வுடன் உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். தேர்தலுக்கு மட்டும் இந்த ஸ்டாலின் வந்து போவதில்லை. எந்த நேரத்திலும், எந்த சூழலிலும் எப்படிப்பட்ட நேரத்திலும் உங்களின் வாழ்வில் உள்ள சுக, துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கூடியவன் இந்த ஸ்டாலின். அந்த உரிமையுடன் உங்களைத் தேடி வந்துள்ளேன். ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு வந்துள்ளேன். ஏன் நானும் ஒரு வேட்பாளர் தான். கொளத்தூர் தொகுதி வேட்பாளர். இவர்கள் எல்லாம் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர் ஆக முடியும். ஆகவே இவர்கள் அனைவரையும் வெற்றி பெற வைப்பீர்கள் என நம்புகிறேன். பிரிட்டிஸ் காலத்தில் தமிழகத்தின் நுழைவு வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டம் இருந்தது. தமிழகத்தின் எல்லையான உள்ள பகுதிக்கு இன்றைய தினம் நான் வந்துள்ளேன்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீரை இந்த பகுதி மக்களுக்கு தந்தேன் என்ற உரிமையுடன் வந்து இருக்கிறேன். இந்த மாவட்டத்தில் இந்த தொகுதியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார். அமைச்சராக இல்லாவிட்டாலும், அமைச்சர் போன்று அவர் செயல்படுகிறார். ஆம் அவர் தான் கே.பி.முனுசாமி. 30 பிரசண்டேஜ் கே.பி.முனுசாமி என்று சொன்னால் தெரியும். ஒருமுறை அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் இவர் சென்றபோது அங்கிருந்தவர்கள் 30 பிரசண்டேஜ் என்றார்கள்.
ஜெயலலிதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அருகிலிருந்தவர்களிடம் கேட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் அனைத்திலும் 30 பிரசண்டேஜ் கமிஷன் கொடுக்க வேண்டும். அதற்காக அவருக்கு அந்த பட்டத்தைச் சூட்டி உள்ளார்கள் எனக் கூறினார்கள். உடனே அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஜெயலலிதா மறைந்த பிறகு தான் கே.பி.முனுசாமிக்கு அரசியலில் ஒரு புது வாழ்வு கிடைத்தது.
ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது சமாதி முன்பு ஒரு போராட்டம் நடத்தினார். அப்போது அவரிடம் கே.பி.முனுசாமி ஒட்டிக் கொண்டார். பின்னர் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்த பிறகு ஜெயலலிதா மரணத்தைப் பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகிய 2 பேரையும் மிரட்டி பதவி வாங்கியவர் கே.பி.முனுசாமி.
நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பிறகு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற்றார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் இருப்பவர்கள் செய்த தவறுகள், ஊழல்களை பட்டியலிட்டு ஆதாரமாக கவர்னரிடம் கொடுத்தோம். முதலமைச்சர் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளார்.
டெண்டர்களை அவரது சம்பந்திக்கு கொடுத்து 3 முதல் 4 கோடி வரையில் ஊழல் செய்துளளார். இது தொடர்பாக தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் ஆலந்தூர் பாரதி வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மீதான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரிக்க முதலமைச்சர் சுப்ரீம் கோர்ட்டு சென்று தடை உத்தரவு பெற்றார். அந்த தடை உத்தரவால் அவர் முதலமைச்சராக நீடித்து வருகிறார். இல்லாவிட்டால் அவர் இன்று சிறையில் இருப்பார்.
அதே போல ஓ.பன்னீர் செல்வம் மீதும் ஒப்பந்தம் போட்டதில் பல கோடி ஊழல் செய்த வழக்கு உள்ளது. டாலரிலேயே ஊழல் செய்தவர் அவர். உள்ளாட்சித்துறை மந்திரியாக உள்ள வேலுமணி பல கோடி ஊழல் செய்துள்ளார். தெரு விளக்கு, பல்பு வாங்கியதில் பல கோடி ஊழல் செய்துள்ளார். கரோனாவை பயன்படுத்திக் கொள்ளையடித்தது அ.தி.மு.க. ஆட்சி. மாஸ்கில் கூட கொள்ளையடித்தனர். அதேபோல மின்துறை அமைச்சர் தங்கமணி, சைலண்டாக ஊழல் செய்பவர். நிலக்கரி இறக்குமதியில், காற்றாலையில், உதிரிப்பாகங்கள் வாங்கியதில் ஊழல் செய்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களுக்கு வாக்கி&டாக்கி வாங்கியதில் ஊழல் செய்தளளார். வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் என ஏராளமான அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளார்கள். ஊழல்வாதிகளால் நடத்தப்பட்ட கேபினட் தான் அ.தி.மு.க. ஆட்சி. வெளிப்படையான நிர்வாகம் கொடுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய் ஆகும். அறப்போர் இயக்கம் என்ற ஒரு இயக்கம் சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட சிலருக்கு தான் டெண்டர்கள் கிடைக்கும் என கூறி உள்ளார்கள். அமைச்சர் வேலுமணியின் உறவினருக்குத் தான் அனைத்து டெண்டர்களும் கிடைக்கும். கடைசி நேரத்தில் கூட 3 முதல் 5 ஆயிரம் கோடி வரையில் கொள்ளையடித்துள்ளனர்.
தி.மு.க. ஆட்சிககு வந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர்கள் வரை செய்த ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். ஒரு அ.தி.மு.க.வினரை கூட ஜெயிக்க வைத்து எம்.எல்.ஏ.க்கள் ஆக்கி விடக் கூடாது. பா.ஜனதாவில் ஒருவர் கூட ஜெயித்து எம்.எல்.ஏ. ஆக போவதில்லை. அது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அ.தி.மு.க.வில் ஒருவர் ஜெயித்தாலும் அது பா.ஜனதா எம்.எல்.ஏ. தான் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு அ.தி.மு.க. எம்பி. ஜெயித்து இன்று பா.ஜனதா எம்பி.யாக அவர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற ஜனதா தளம் 200 இடங்களும் மேல் வெற்றி பெறும்.
நேற்றைய தினம் கூட தனியார் தொலைக்காட்சியில் நமது அணி தான் வெற்றி பெறும். ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறி உள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் 200 அல்ல 234 இடங்களிலும் நாம் தான் ஜெயிக்க போகிறோம். உதவாக்கரை அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அடிமைத்தனமான ஆட்சியை, பா.ஜனதா மோடிக்கு அடிமையாக இருக்கக் கூடிய ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். அவரால் காவிரி உரிமையை நிலை நாட்ட முடியவில்லை. நீட் தேர்வைத் தடுக்க முடியவில்லை. ஜி.எஸ்.டி. வரியை குறைக்க முடியவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வர முடியவில்லை. மோடியை டாடி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள். 4 வருடமாக மக்கள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
போக்குவரத்து ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் உரிமைக்காக, கோரிக்கைகளுக்காகப் போராடி வருகிறார்கள். மின் கட்டணம், பால் கட்டணம் விலை கடுமையான உயர்ந்துவிட்டது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நாம் பல உறுதிமொழிகளைக் கூறி உள்ளோம். கலைஞர் சொன்னதைச் செய்வார். செய்வதைச் சொல்வார். அவரது மகனான நானும் அவர் வழியில் சொன்னதை தான் செய்வேன். செய்வதைத் தான் சொல்வேன்.
மக்கள் வாழ்க்கையில் வளம் பெற எண்ணற்ற அறிவிப்புகளை நாம் கூறி உள்ளோம். இன்றைய தினம் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்களாகிய நீங்கள் நிற்கிறீர்கள். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கொடுமையை விட இந்த வெயில் கொடுமை ஒரு பெரிய கொடுமையே இல்லை என நீங்கள் முடிவு செய்து இங்குக் கூடி உள்ளீர்கள். கரோனாவால் மூடப்பட்ட தொழிற்சாலைகளை இயங்க வைத்து அனைவருக்கும் மீண்டும் வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சிறு தொழிற்சாலைகள் இயங்க ரூ.15 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்படும். தொழிலாளர் நல வாரியம் முழு வீச்சில் இயங்கப்படும். வேளாண்மை திருத்த 3 சட்டங்களை திரும்பப் பெறச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட், உழவர் சந்தைகள் மீண்டும் புத்துயிர் பெறும். நெல்லுக்கு ஆதார விலையாக ரூ.2,500&ம் கரும்புக்கு ரூ.4 ஆயிரமும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் முழுமையாக ரத:து, 5 பவுன் வரை உள்ள நகை கடன் ரத்து, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலை வாய்ப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு. ஆரம்ப பள்ளி ஆசிரியர்களில் பெண்களுக்கு முக்கியத்துவம், திருமண உதவித்தொகை, விதவை மறுவாழ்வு திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் உள்ளன.
ஏழை, எளிய மக்களுக்காக திருமண நிதியுதவி திட்டம், மகளிர் சுய உதவிக்குழு இவற்றைக் கொண்டு வந்தவர் கலைஞர். தற்போது நமது தேர்தல் அறிக்கையில் மாதம் ரூ.1000 உதவித்தொகை மகளிருக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளோம். கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசலுக்கு லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும். சிலிணடருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். பாலுக்கு லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.
இதைத் தவிர இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும். கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டையில் குளிர்பதன கிடங்கு, ஓசூர் இ.எஸ்.ஐ.மருத்துவமனை தரம் உயர்வு, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்படும். ஓசூரில் தகவல் தொழில் பூங்கா இயங்க நடவடிககை. ஓசூரில் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு விடுதி வசதி, பர்கூரில் கலைக் கல்லூரி, ஏரிகளுக்கு நீர் நிரப்ப நடவடிக்கை. இப்படி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தர உள்ளோம்.
கடந்த 7-ந் தேதி திருச்சியில் நடந்த மாநாட்டில் 7 அறிவிப்புகளை வெளியிட்டேன். அது 10 ஆண்டுகளுக்கு தொலை நோக்கு பார்வையுடன் கூடியது. ஏன் என்றால் தற்போது தமிழகம் பின்னோக்கி உள்ளது. இந்தி திணிப்பு, நீட் திணிப்பு போன்றவற்றை இங்கு புகுத்த முயற்சி செய்கிறார்கள். அது முடியாது. இது பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர் பிறந்த திராவிட மண். மோடி மஸ்தான் வேலைகள் தமிழ்நாட்டில் பலிக்காது.
சுய மரியாதை, தன்மானம் காப்பாற்றப்பட வேண்டும். ஒட்டு மொத்த தமிழகமும் மீட்கப்பட வேண்டும். மாநிலத்தின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். எனவே வருகிற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் சேலம் சாலை, சென்னை சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்து சென்று தி.மு.க.வுக்கு வாக்குகளைச் சேகரித்தார். அப்போது ஏராளமான பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.