மருங்காபுரி: தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு
மருங்காபுரி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்னையை தீர்க்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி, பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ளது கலைஞர் நகர் பகுதி. இன்று காலை அங்குள்ள குடியிருப்புகளில் கறுப்புக் கொடி கட்டி, குடிநீர் பிரச்னையை தீர்க்காத ஊராட்சி நிர்வாகத்தினை கண்டித்து தேர்தலைப் புறக்கணிப்பதாக ப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
இப்பகுதியில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த 40 வருடங்களாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த பொது குடிநீர் குழாயினை அருகே உள்ள சிங்கிலிப்பட்டியைச் சேர்ந்தவர் உடைத்து விட்டதாகவும், இதுகுறித்து கஞ்சநாயக்கன்பட்டி தலைவர் ஏதும் கேட்கவில்லை என்று புகார் கூறும் கலைஞர் நகர் பொதுமக்கள்,
ஒரு ஆழ்துளை கிணற்றுக்கு வைக்கப்பட்டுள்ள இரண்டு தொட்டிகளில் ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும், அவை அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்தினரிடமும், ஒன்றிய ஆணையர் மற்றும் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியரகம் ஆகியற்றில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எனக் கூறி நாங்கள் அகதிகளா என்று தெரியவில்லை, பஞ்சாயத்து நிர்வாகம் எங்களை ஏன் புறக்கணிக்கிறது? இதற்குமேல் போராட எங்களுக்கு சக்தியில்லை என்றும் எங்களுடைய கடைசி போராட்டம் இதுதான் என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நேரில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.