தேர்தலுக்குப் பிறகு 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து: கே.எஸ்.அழகிரி
தேர்தலுக்குப் பிறகு 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியே, குறைவான அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தான் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தச் சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பா.ஜ.க. அரசு தெரிவித்துள்ள கருத்து, தமிழக மாணவர்கள் மீது நடத்திய நேரடித் தாக்குதலாகும்.
பாஜக அரசின் இத்தகைய அணுகுமுறை சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது. நீட் கொண்டு வந்து தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்த பா.ஜ.க.வின் அடுத்த அஸ்திரம் தான் நீதிமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்துள்ள கருத்து. இதன்மூலம் தேர்தலைக் கருத்தில் கொண்டே அ.தி.மு.க. அரசும் 7.5 இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்துள்ளது தெளிவாகிறது.
தேர்தலுக்குப் பிறகு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்தது உண்மையாகிவிட்டது. நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன், நீ அழுவது போல் நடி..; என்பது போல் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தோடு பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் தமிழர் விரோதப் போக்கிற்குத் தமிழக வாக்காளர் முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.