'தமிழர்களின் ஒருமித்த குரலாக உங்கள் குரல் ஒலிக்கட்டும்' - ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து
தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும் என முதல்வராகப்பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும் என முதல்வராகப்பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து 133 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'முடிந்ததே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று 'மக்களின் முதல்வராக' பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
சுவாசிப்பதற்கு உயிர் காற்று கூட கிடைக்காமல் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில் நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் வாழ்த்துகள்.
தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.