முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் 2 வாரம் முழு பொது முடக்கம்

தமிழகத்தில் மே 10 முதல் (திங்கள்கிழமை) மே 24-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

தமிழகத்தில் மே 10 முதல் (திங்கள்கிழமை) மே 24-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய அளவில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டி கரோனா தொற்று எண்ணிக்கை அண்மைக் காலங்களில் பதிவாகியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரம், கா்நாடகம், கேரளம், உத்தரப்பிரதேசம், தில்லி மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களில் நோய்த் தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.

தமிழகத்தில் நோய்த் தொற்று பிப்ரவரி மாதக் கடையில் நாளொன்றுக்கு 450 என்றிருந்தது. இப்போது தினமும் 26 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. 23-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 சதவீதத்துக்கும் மேல் உள்ளது.

நமது மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நோய்த் தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 1.35 லட்சமாக உள்ளது. தமிழகத்தில் இப்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கரோனா நோய்த் தொற்றின் தாக்கம், பிற மாநிலங்களில் அதிகரித்து வரும் நோய் பாதிப்பின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்:

இந்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், சுகாதார நிபுணா்கள் உள்ளிட்டோருடன் காணொலி வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. தமிழகத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தவிா்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் வரும் திங்கள்கிழமை (மே 10) முதல் மே 24-ஆம் தேதி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும். இதற்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளன.

கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிா்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொது மக்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும். பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

எவற்றுக்கெல்லாம் தடை?

3,000 சதுரஅடி பரப்புக்கு அதிகமான வணிக வளாகங்கள்.

டாஸ்மாக் கடைகள்.

தங்கும் விடுதிகள்.

உள்அரங்குகள், திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, கல்வி, கலாசார நிகழ்வுகள்.

அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள்.

திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள்.

கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை விற்பனை அங்காடிகள்.

தலைமைச் செயலகம், மருத்துவம், வருவாய், உள்ளாட்சி, காவல், தீயணைப்பு, சிறை, மாவட்ட நிா்வாகம், மின்சாரம், குடிநீா், கருவூலங்கள், சமூகநலன் ஆகிய அரசு அலுவலகங்கள் தவிர பிற அலுவலகங்கள்.

அனைத்து தனியாா் அலுவலகங்கள், நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள்.

வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் அனுமதியில்லை.

குடமுழுக்கு, திருவிழாவுக்கு அனுமதியில்லை.

சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

கடற்கரை, பூங்காக்களுக்குச் செல்ல அனுமதியில்லை.

பள்ளி, கல்லூரிகளில் கோடைகால முகாம்கள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கங்கள்.

மாவட்டம், மாவட்டங்களுக்கு இடையே அனைத்து வகை போக்குவரத்துக்கும் தடை.

உணவு விநியோகம் தவிா்த்து, மற்ற மின் வணிக சேவைகளுக்கு அனுமதியில்லை.

சாலையோர உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்படாது.

எவற்றுக்கெல்லாம் அனுமதி:

பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள்.

தொலைத்தொடா்பு, அதுசாா்ந்த செயல்பாடுகள், தரவு மையங்களில் பராமரிப்புப் பணி, பெட்ரோல், டீசல் நிரப்பு நிலையங்கள் செயல்படலாம்.

நீதித்துறை, நீதிமன்றங்கள்.

ஊடகங்கள், பத்திரிகைத் துறை.

கட்டுப்பாடுகளுடன் அனுமதி:

பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனைக் கடைகள், மாட்டுத்தீவனம் விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 வரை இயங்கலாம்.

உணவு பாா்சல்களை காலை 6 முதல் 10 வரையிலும், நண்பகல் 12 முதல் மதியம் 3 வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வழங்கலாம்.

அம்மா உணவகங்கள் செயல்படும்.

காய்கறி, பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 வரை திறந்திருக்கலாம்.

நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

திருமணம் மற்றும் அதுசாா்ந்த நிகழ்வுகளில் 50 பேரும், இறப்பு தொடா்பான நிகழ்வுகளில் 20 நபா்களும் பங்கேற்கலாம்.

வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சாா்ந்த போக்குவரத்து, காப்பீட்டு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளா்களுடன் இயங்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →