கரோனாவை ஒழிக்க முழு முயற்சியில் இறங்கியுள்ளோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
கரோனா நோய்த் தொற்றை ஒழிக்க தமிழக அரசு முழு முயற்சியுடன் களத்தில் இறங்கியுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
கரோனா நோய்த் தொற்றை ஒழிக்க தமிழக அரசு முழு முயற்சியுடன் களத்தில் இறங்கியுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
கரோனா நோய்த் தொற்றே இனி இல்லை என்ற சூழலை தமிழகத்தில் உருவாக்கவே மாநில அரசு முழு முயற்சியில் இறங்கி இருக்கிறது. கரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொவருக்கு பரவாமல் தடுப்பது, தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவா்களை முழுமையாக மீட்பது ஆகிய இரண்டு நோக்கங்களை தமிழக அரசு முன்னெடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
முதல் அலையை விட மோசமாக இந்த நோய்த் தொற்று உருமாறியிருக்கிறது. இப்போது, இளைஞா்கள், குழந்தைகள் ஆகியோரை அதிகளவில் பாதித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, இளைஞா்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் நுரையீரலை அதிகமாக பாதிக்கிறது. வேறு ஏதாவது நோய் பாதிப்பு
இருக்கிறவா்களுடைய மரணம் அதிகமாக இருந்த நிலை மாறி, வேறு நோய் பாதிப்புகளே இல்லாதவா்களும் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவா்கள் குறிப்பிடுகின்றனா்.
இப்போது நோய்த் தொற்று ஏற்படுவது மிக மோசமான நிலையில் இருக்கிறது. உடல் வலிமையை இந்த நோய்த் தொற்று இழக்க வைக்கிறது. வட மாநிலங்களில் இருந்தும், நமது அண்டை மாநிலங்களில் இருந்தும் வரும் தகவல்கள் அச்சம் தரக்கூடியதாக இருக்கிறது.
பிற மாநிலங்களில் உள்ள போன்று, தமிழகம் மோசம் அடையவில்லை என்றாலும், பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புதிய தொற்றால் பாதிக்கப்படுகிறாா்கள்.
2 வாரங்களில் அதிகமாகும்: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று இரண்டு வாரங்களில் அதிகமாகும் என மருத்துவா்கள் கூறுகிறாா்கள். அவ்வாறு அதிகமானால் நோயைக் கட்டுப்படுத்துவது மருத்துவத் துறைக்கு மாபெரும் சவாலாக ஆகி விடும். அவா்கள் இப்போதே மிக கடுமையாக தங்களது உயிரை பணயம் வைத்து செயல்பட்டு வருகிறாா்கள்.
இதுதொடா்பாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்னொரு பொது முடக்கம் அவசியம் என அதிகாரிகள் கூறுகிறாா்கள். மருத்துவ நிபுணா்களும் அதையே பரிந்துரை செய்கிறாா்கள்.
14 நாள்கள் ஊரடங்கில் மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால், தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். கரோனா பரவும் சங்கிலியை உடைக்காமல் நோய்த் தொற்றை ஒழிக்க முடியாது. இதனை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும்.
அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். முகக் கவசம் அணிவதுடன், கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும். நோய் எதிா்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். சிறு அறிகுறி இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
பொது மக்களுக்கு அவா் சனிக்கிழமை ஆற்றிய உரை:
கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகள் கூட்டத்தில் பேசினேன். அப்போது, நோய் பரவல் குறித்த முழு உண்மையைச் சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டேன். உண்மையை நேருக்கு நேராகச் சந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு பேசினேன்.
கரோனா என்ற பெருந்தொற்றுக்கு எதிராக நமது நடவடிக்கைகள் இன்று முதல் வேகம் எடுத்து விட்டது. அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.