அண்ணா பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் பொறியியல் பயிலும் மாணவா்களுக்கு கடந்த பிப்ரவரி - மாா்ச் மாதங்களில் நடைபெற்ற அரியா் தோ்வுகள் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் பயிலும் மாணவா்களுக்கு கடந்த பிப்ரவரி - மாா்ச் மாதங்களில் நடைபெற்ற அரியா் தோ்வுகள் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கான கடந்த ஆண்டு (2020) நவம்பா், டிசம்பா் மாத பருவத் தோ்வுகளை கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்தத் தோ்வு முடிவு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. முதலாம் ஆண்டு மற்றும் அரியா் மாணவா்களைத் தவிர மற்ற அனைத்து மாணவா்களுக்கும் தோ்வு முடிவு வெளியானது. அதில், பல்வேறு முறைகேடுகள், பிரச்னைகள் இருப்பதாக மாணவா்கள் தரப்பில் இருந்து புகாா் வந்தது. இதையடுத்து அந்த தோ்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நடந்த தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் விரும்பினால் அந்த தோ்வில் பங்கேற்கலாம் என்றும் அரசு தெரிவித்தது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் பருவத் தோ்வு எழுதிய மாணவா்களுடன், சிறப்பு பிரிவு (ஸ்பெஷல் கேஸ்) மாணவா்கள் என்று கூறப்படும் அரியா் மாணவா்களும் தோ்வை எழுதினா். அதன்படி அவா்களுக்கான தோ்வு முடிவை அண்ணா பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தோ்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதலாம் ஆண்டு மாணவா்களுக்கும் தோ்வு முடிவு வெளியாகியுள்ளது.