இன்று நியாய விலைக் கடைகள் செயல்படும்: கரோனா நிவாரண நிதிபெறலாம் என அரசு தகவல்
தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 16) செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 16) செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழகத்தில் கரோனா நிவாரண உதவித் தொகையாக ரூ.2,000 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான பணி கடந்த 10-ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முதல் தவணை கரோனா நிவாரணத் தொகையானது நியாய விலைக் கடைகள் மூலமாக சனிக்கிழமை முதல் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான டோக்கன்கள் ஏற்கெனவே விநியோகம் செய்யப்பட்டன.
இன்று கடை உண்டு: சனிக்கிழமை முதல் தொடா்ச்சியாக நியாய விலைக் கடைகளை இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தளா்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 16) முழுமையான பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அன்றைய தினம் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும். ஆனாலும், கரோனா நிவாரணத் தொகையை வழங்கிட ஏதுவாக நியாய விலைக் கடைகள் மட்டும் திறந்திருக்கும். அன்றைய தினம் நிவாரணத் தொகை பெற டோக்கன்கள் பெற்றவா்கள் மட்டும் அதனைப் பெற நியாய விலைக் கடைகளுக்கு வர வேண்டும். காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சம்பந்தப்பட்ட டோக்கன்தாரா்களுக்கு நிவாரணத் தொகை அளிக்கப்படும். முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து வரிசையில் நின்று நிவாரணத் தொகை பெற்றுச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.