மானாமதுரையில் சொந்த செலவில் வீதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் இளைஞர்!
மானாமதுரையில் 16 வது வார்டு பகுதியில் வசிக்கும் சோம. சதீஷ்குமார் என்ற இளைஞர் தினமும்தான் வசிக்கும் பகுதியில் சொந்த செலவில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 16 வது வார்டு பகுதியில் வசிக்கும் சோம. சதீஷ்குமார் என்ற இளைஞர் தினமும்தான் வசிக்கும் பகுதியில் சொந்த செலவில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
மானாமதுரை பேரூராட்சி 16-ஆவது வார்டைச் சேர்ந்தவர் இளைஞர் சோம.சதீஷ்குமார், தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் இவர் இப்பகுதியில் திமுக வட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் தான் வசிக்கும் 16 ஆவது வார்டு மற்றும் அருகே உள்ள 17 வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் தனது சொந்த செலவில் கிருமிநசினி மருந்து வாங்கி அதை கைத்தளிப்பான் எந்திரத்தின் மூலம் அவரே நேரடியாக களத்தில் இறங்கி தெளித்து வருகிறார். இவரது இந்த செயலுக்கு 16 ஆவது, 17 ஆவது வார்டு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து அவரைப் பாராட்டி வருகின்றனர்.
மேலும் கடந்த ஒரு மாத காலமாக சதீஷ்குமார் தனது சொந்த செலவில் 16 வது வார்டு பகுதியில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தணித்து வந்தார்.
அதன்பின்னர் கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்தது. இதனால் சதீஷ்குமார் நீர் மோர் கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட பந்தலில் நீர் மோர் கொடுக்கும் பணியை நிறுத்திவிட்டு அதே பந்தலில் கபசுர குடிநீர் வைத்து பொதுமக்களுக்கு தினமும் காலையில் கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கி கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
இதுகுறித்து சதீஷ்குமார் கூறுகையில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நான் எனக்கு கிடைக்கும் ஊதியத்தில் ஒரு பகுதியை பொதுமக்களின் நலனுக்காக செலவழிக்க முடிவு செய்து முதலில் கோடைக் காலம் தொடங்கியதும் 16 வது வார்டு பகுதியில் நீர் மோர் பந்தல் அமைத்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நீர் மோர், தண்ணீர், பழங்கள் பொதுமக்களுக்கு கொடுத்து வந்தேன்.
அதன்பின் கரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்தது. அதிலிருந்து பொதுமக்களை காக்க கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கி கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
தற்போது 16 வது வார்டு 17 வது வார்டு பகுதியில் தினமும் நானே கை தெளிப்பான் இயந்திரத்தின் மூலம் கரோனா தொடர் பரவலைத் தடுக்க கிருமி நாசினி மருந்து தெளித்து வருகிறேன்.
பொதுமுடக்க காலத்தை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இதைச் செய்து வருகிறேன் என்றார்.