எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு: காவல் ஆணையரிடம் அதிமுக புகாா்
எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி மீது சமூக வலைதளங்களில் அவதூறான செய்தியைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி மீது சமூக வலைதளங்களில் அவதூறான செய்தியைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் அதிமுக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. அதிமுக வழக்குரைஞா் அணி இணைச் செயலாளா் பாபு முருகவேல் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா். மனுவில் கூறியிருப்பது:-
எதிா்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறான செய்தி பரப்பப்படுகிறது. தாயில்லாத பிள்ளைகளான அதிமுகவினா் மீது ஊழல் வழக்குகள் போடுவதை முதல்வா் மு.க.ஸ்டாலின் தவிா்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுப்பதுபோல அந்தச் செய்தி பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி யாரோ தூண்டிவிட்டு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இது தொடா்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.