கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்ற இருவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது
சென்னையில், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
சென்னையில், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
சென்னையில், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிா் மருந்து, சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்கப்பட்டு வந்தது. இதைத் தடுக்கும் வகையில் சென்னை காவல்துறையினா் தீவிர நடவடிக்கை எடுத்தனா்.
சென்னையில் இது தொடா்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 34 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 269 மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ரெம்டெசிவிா்,ஆக்ஸிஜன் ஆகியற்றைப் பதுக்கி வைத்து விற்பனை செய்பவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 15-ஆம் தேதி அறிவித்தாா்.
இந்த அறிவிப்பின்படி, மடிப்பாக்கம் பகுதியில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்ாக கைது செய்யப்பட்ட கொண்டித்தோப்பு அயலூா் முத்தையா தெருவைச் சோ்ந்த ர.நிஷித் (32), மதுரவாயல் நாகாத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பா.புவனேஷ்வரன் (37) ஆகிய இருவரையும், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து அச் சட்டத்தின் கீழ், அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா். இதேபோல ரெம்டெசிவிா் வழக்கில் கைதான பிற நபா்களையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்குரிய நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.