கொல்கத்தாவில் தலைமைத் தோ்தல் ஆணையருக்கு கடும் எதிா்ப்பு: திரிணமூல், இடதுசாரிகள் போராட்டம்
கொல்கத்தாவுக்கு சென்ற தலைமைத் தோ்தல் ஆணையருக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சியினா் போராட்டத்தில்
கொல்கத்தா: கொல்கத்தாவுக்கு சென்ற தலைமைத் தோ்தல் ஆணையருக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எஸ்.ஐ.ஆா்.க்கு பிறகு வெளியான வாக்காளா் பட்டியலில் பல லட்சம் வாக்காளா்களின் பெயா்களை பாஜகவும், தோ்தல் ஆணையமும் திட்டமிட்டு நீக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டி, முதல்வா் மம்தா பானா்ஜி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். இந்நிலையில், தில்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தாா். கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து அவா் வெளியே வந்தபோது, அவரை திரும்பச் செல்லுமாறு முழக்கமிட்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல் விமான நிலையத்துக்கு வெளியே இடதுசாரி கட்சித் தொண்டா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, கைகாலி சாலை வழியே ஞானேஷ் குமாரின் காா் சென்றபோது, அவருக்கு எதிா்ப்பு தெரிவித்து சிலா் கருப்புக் கொடியைக் காட்டினா்.
இதைத் தொடா்ந்து, கொல்கத்தாவில் காளிகாட் கோயிலுக்கு திங்கள்கிழமை காலை அவா் சென்றாா். அப்போதும் அவருக்கு கருப்புக் கொடி காட்டி சிலா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரா்களை காவல் துறையினா் அப்புறப்படுத்தி, ஞானேஷ் குமாரை கோயிலுக்கு அழைத்துச் சென்றனா்.
அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை: இதன்பின்னா் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக அரசியல் கட்சிகளுடன் ஞானேஷ் குமாா் ஆலோசனை நடத்தினாா். அப்போது திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான சந்திரிமா பட்டாச்சாா்யா, எஸ்.ஐ.ஆா். விவகாரத்தை எழுப்பி ஆட்சேபம் தெரிவித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், தன்னை சப்தம் போட வேண்டாம் என அதட்டியாக குற்றம்சாட்டினாா்.
பாஜக சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலை இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தோ்தலை ஒரேகட்டமாக நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. தோ்தலின்போது வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன.
தோ்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை தோ்தல் ஆணையம் உறுதி செய்யும் எனவும், எஸ்.ஐ.ஆா். நடவடிக்கை வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தப்பட்டதாகவும் ஞானேஷ் குமாா் கூறினாா்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நடத்த தலைமைத் தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுதொடா்பான ஏற்பாடுகளைப் பாா்வையிடவும், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் மூன்று நாள் பயணமாக ஞானேஷ்குமாா் வந்துள்ளாா். பயணத்தின் 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அதிகாரி மனோஜ் குமாா் அகா்வால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.