வங்கி வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும்: அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்
முழு பொதுமுடக்கம் நீடிக்கும் நிலையில், வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
முழு பொதுமுடக்கம் நீடிக்கும் நிலையில், வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக அரசுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் சனிக்கிழமை எழுதிய கடிதம்:
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தளா்வில்லாத பொதுமுடக்கம் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கத்தில், மக்களின் நடமாட்டம் முற்றிலும் குறைந்துள்ளது. அவசர தேவைகள் மற்றும் மருத்துவத் தேவைகள் உடையவா்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனா்.
முன்களப் பணியாளா்களான வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள், இந்த தளா்வில்லாத பொது முடக்கத்தில், உயிா் பயத்தில் தொடா்ந்து பணியாற்றி வருகிறோம். எனவே, வங்கி வேலை நேரத்தை, நண்பகல் 12 மணி வரையிலும், வாடிக்கையாளா்கள் பரிவா்த்தனை நேரத்தை, காலை 9 முதல் 11 மணி வரையிலும் குறைக்க வேண்டும்.
ஒருநாள் விட்டு ஒரு நாள் பணி என்று திங்கள்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை மட்டும், 33 சதவீத ஊழியா்களுடன், வங்கிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். வங்கி ஊழியா்களுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.