கரோனா: ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுவதால், தடுப்புப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக, சனிக்கிழமை இரவு ஈரோடு வந்து தங்கிய முதல்வர் ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு, கரோனோ நோயாளிகள் சிகிச்சை பெற அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கை வசதியினைப் பார்வையிட்டார். மேலும், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
Advertisement
தொடர்ந்து, மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, தலா 5 மருத்துவர்கள், 5 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளைப் பார்வையிட புறப்பட்டார். ஆய்வின்போது, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மக்களவை உறுப்பினர்கள் அ.கணேசமூர்த்தி, கே.சுப்பராயன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.