தமிழ்நாடு

ஆவின் பால் விலையை உயர்த்தி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் நாசர் 

DIN

திருநெல்வேலி: தமிழகத்தில் ஆவின் பால் விலையை உயர்த்தி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலியில் ரஹ்மத்நகர்,  திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம் பகுதிகளில் ஆவின் பால் விற்பனை மையங்களிலும், ரெட்டியார்பட்டியில் உள்ள ஆவின் ஆலையிலும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த பின்பு அவர் மேலும் கூறியது:

கரோனா தொடர் சங்கிலி அறுபடவே தமிழகத்தில் தளர்வுகளற்ற முழுபொதுமுடக்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமுடக்க காலத்திலும் காய்கனி, பழங்கள், பால், மருந்து ஆகியவை எவ்வித தட்டுப்பாடுமின்றி மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆவின் நிறுவனத்திற்கு ரூ. 270 கோடி இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த இழப்பினை ஈடுகட்ட பால் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பால்பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் 39 லட்சம் லிட்டராக தமிழகத்தில் உயர்ந்துள்ளது. பால் விலை குறைக்கப்பட்ட பின்பு 3 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

பால் விலையை குறைக்காமல் விற்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே பால் விலையை உயர்த்தி விற்ற 13  கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மண்டலங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுவிட்டன. அதனை இனிமேல் சேர்க்காமல் இரண்டையும் மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை தீவனம் தட்டுப்பாடின்றி வழங்கப்படுகிறது. வெளிச்சந்தையைக் காட்டிலும் ஆவின் மூலம் விற்கப்படும் கால்நடை தீவினம் விலை குறைந்துள்ளது. 

பொதுமுடக்க காலத்தில் பால் விநியோகித்தை அதிகரிக்க ஏதுவாக கூடுதலாக 365 விற்பனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நடமாடும் பால் விற்பனை மையம் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பால் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்கள் கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளாக ஏற்றுமதி தடைபட்டுள்ளது. ஆகவே, மீண்டும் ஆவின் நிறுவன தயாரிப்புகளை அதிகப்படுத்தி ஏற்றுமதிக்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றார் அவர்.

ஆய்வின்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்வே.விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள். பாளையங்கோட்டை மு.அப்துல்வஹாப், நான்குனேரி ரூபி மனோகரன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், திமுக தென்காசி தெற்கு மாவட்டச் செயலர் சிவ.பத்மநாதன், திருநெல்வேலி ஆவின் பொது மேலாளர் நாகராஜன், நிர்வாகிகள் அனுசுயா, ஜோசபின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT