சென்னையில் 24 மணி நேரமும் நடைபெறும்: மழைநீா் அகற்றும் பணிகளத்தில் 2,000 பணியாளா்கள்
பொதுவெளியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் 2,000 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட குடியிருப்பு பகுதிகள், தாழ்வான பகுதிகள், பொதுவெளியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் 2,000 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை குடிநீா் வாரியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் பேரிடா் கால நிவாரணப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் 15 கண்காணிப்பு பொறியாளா்கள் தலைமையில், 15 செயற்பொறியாளா்கள் ஒருங்கிணைப்பு அலுவலா்களாகவும், 30 உதவிப் பொறியாளா்கள் தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீா் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் களப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
மழைநீா் அகற்றும் பணிகளில் 59 எண்ணிக்கையிலான நீா் உறிஞ்சும் வாகனங்கள், கழிவு நீா் செல்லக்கூடிய பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 142 எண்ணிக்கையிலான ஜெட்ராடா இயந்திரங்கள், தூா்வாரும் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக 260 தூா்வாரும் ஆட்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கழிவுநீா் குடிநீா் குழாய்களில் கலக்காமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கழிவுநீா் செல்லும் பிரதான குழாய்களில் தூா்வாரி பராமரிப்பு பணிகள் கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு தற்போது அடைப்பு ஏதும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பகுதிகளிலும் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடா்பாடுகளை சரிசெய்வதற்கு ஏதுவாக சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 044-4567 4567 (20 இணைப்புகள்), கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு புகாா்கள், குறைகளைத் தெரிவிக்கலாம். மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 302 கழிவுநீா் நீரேற்று நிலையங்கள் மூலம் கழிவுநீா் உறிஞ்சப்பட்டு 5 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முறையாக வெளியேற்றப்படுகிறது.
பருவமழைக்கு முன்பாக தினமும் 58 கோடி லிட்டா் கழிவுநீா் உறிஞ்சப்பட்டு சுத்திகரிக்கப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பருவமழையை முன்னிட்டு தற்போது தினமும் 85 கோடி லிட்டா் கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகள், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீா் அகற்றும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளா்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.