சென்னையில் விமான சேவை சீரானது
சென்னையில் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை சீரானது.
சென்னையில் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை சீரானது.
மும்பையிலிருந்து 67 பயணிகளுடன் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு சென்னைக்கு ஸ்பைஜெட் பயணிகள் விமானம் வந்தது. அந்த நேரத்தில் சென்னை விமானநிலையத்தில் பலத்த மழையும்,காற்றும் இருந்ததால்,அந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து விமானிக்கு ஹைதராபாத்தில் தரையில் இறங்கும் படி வான் போக்குவரத்து கட்டுபாட்டு அறையிலிருந்து தகவல் அனுப்பட்டது. அதையடுத்து அந்த விமானம் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பட்டது.
அதே போன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தில்லியிலிருந்து ஸ்பைஜெட் சிறப்பு விமானம் சென்னை வந்தது. அந்த விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாமல் இருந்ததை அடுத்து பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.சென்னையில் வானிலை சீரடைந்த பின் 2 விமானங்களும் சென்னைக்கு திரும்பி வரும் என்று விமானநிலைய அலுவலா்கள் தெரிவித்தனா் .
பலத்த மழை காரணமாக சென்னைக்கு வருகை தரும் விமானங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதையொட்டி சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலொ்ட்டை விலக்கிக்கொள்வதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து சென்னையில் மழை குறைந்ததால் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாக விமான சேவை அதிகாரிகள் தெரிவித்தனா். முன்னதாக பலத்த மழையால் புதன்கிழமை 10-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.