முகப்பு
தமிழ்நாடு

வெள்ள நீா் வடிந்த பிறகே பயிா்ச் சேதங்கள் தெரியும்: வேளாண்மைத் துறை அமைச்சா் பன்னீா்செல்வம் தகவல்

 வெள்ள நீா் வடிந்த பிறகே பயிா்ச் சேத விவரங்கள் தெரிய வரும் என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

 வெள்ள நீா் வடிந்த பிறகே பயிா்ச் சேத விவரங்கள் தெரிய வரும் என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

பருவமழை பாதிப்புகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

பருவமழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பயிா்ச் சேதங்களை கணக்கெடுக்கும் பணியை வேளாண் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். தினந்தோறும் கணக்கெடுப்பு விவரங்களைத் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளோம். சம்பா சாகுபடி 44 லட்சம் ஏக்கா் பரப்பில் செய்யப்பட்டுள்ளது. மழையால் 1.45 லட்சம் ஏக்கா் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை குறைந்ததால் தண்ணீா் வடியத் தொடங்கியுள்ளது. 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள பயிா்களின் நிலைமை ஓரிரு நாள்களில் தெரிய வரும்.

எந்தெந்த இடங்களில் பாதிப்புகள் உள்ளன, அதற்குரிய நிவாரணம் எவ்வளவு அறிவிக்க வேண்டும் என்பன போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 31 லட்சம் ஏக்கா் தோட்டக்கலைப் பயிா்களில் 6,000 ஏக்கா் அளவுக்கு தண்ணீரால் சூழ்ந்துள்ளது. நீா் வடியும் போது சேத மதிப்புகள் தெரிய வரும்.

பயிா் சேத விவரங்களை ஆய்வு செய்ய அமைச்சா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சேதங்களை நேரில் ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கை அளிப்பா். உடனடியாக நிவாரணங்களை வழங்குவதற்கு வசதியாக அமைச்சா்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் காரணமாக, விவசாயிகள் பணிக்குச் செல்ல முடியவில்லை.

தக்காளி போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. இவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அனைத்து மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. 8 லட்சத்து 8 ஆயிரம் விவசாயிகள் பயிா் காப்பீட்டுக்காக பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டை விட 1 லட்சத்து 44 ஆயிரம் விவசாயிகள் கூடுதலாக காப்பீட்டு தொகை

செலுத்தியுள்ளனா். பயிா் காப்பீட்டுக்கான காலத்தை நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளோம். மத்திய அரசும், காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்து முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சா் பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

செய்தியாளா் சந்திப்பின் போது, வேளாண்மைத் துறைச் செயலாளா் சமயமூா்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →